பிரிட்டிஸ் ஆட்சிக்காலத்தில் பெருந்தோட்ட பயிர்ச்செய்கைக்காக கொண்டு வரப்பட்ட மலையகத் தமிழர்கள் சந்ததி சந்ததியாய் பட்ட, படுகின்ற துன்பங்கள் சொல்லிமாளா.
லயத்து வாழ்க்கை என்பது எந்தக் குடும்பத்தாலும் கணப்பொழுதும் நினைத்து பார்க்க முடியாத ஒன்று.
ஆனால் இவர்கள் நூற்றாண்டுகளாய் லய வாழ்க்கை. புதிதாய் மணமுடிக்கும் சந்ததிக்கு அதுவும் இல்லை. நாடற்றவர்களாய், வாக்குரிமை அற்றவர்களாய், வீடற்றவர்களாய் நம் உறவுகள்பட்ட அவலம் சொல்லி மாளா.
கற்றல் உரிமை, சுயமாய் உழைக்கும் உரிமை என்று எதுவுமே இல்லாமல் விடிந்தால் தோட்டம் பொழுதுபட்டால் லயம் என்ற திணிக்கப்பட்ட வாழ்க்கை.
கோதுமை ரொட்டி மட்டுமே பசிதீர்க்க இலங்கையின் அன்னிய செலாவணியினை தமது தோள்களில் ஏற்றிய கொழுந்துக் கூடைகளில் தினமும் சுமக்கும் சரீர உழைப்பாளிகளுக்கு நமது நாடு கொடுத்ததெல்லாம் அட்டைக் கடிதான். அட்டைக்கடியின் அகோரத்தில் மனிதர்கள் உறிஞ்சும் இரத்தத்தை இவர்கள் பொருட்படுத்த நேரமிருப்பதில்லை.
அரசமைக்கும் ஆட்சியாளர்களிடம் இவர்கள் கேட்பதெல்லாம் சம்பள அரிகரிப்பு மற்றும் தனிவீடு மட்டும்தான்.

ஆனால் கவனிக்க, ஏன்? காது கொடுத்து கேட்கக்கூட யாரும் முன்வருவதில்லை. ஆனால் இவர்களை வைத்து அரசியல் செய்தோர் பலர். அதுவும் சந்ததி சந்ததியாய்…
ஏதோ! இலட்சத்தில் ஒன்றாய் 1235 வீடுகள் இந்திய அனுசரணையுடன் வழங்கப்பட்டுள்ளமை எதிர்கால வெளிச்சத்தை எதிர்பார்க்கத் தூண்டுகிறது.
ஆனால் இது போதுமா? பாரபட்சம் இன்றி அனைவருக்கும் இடைக்குமா?.
ஒரு முட்டை இட்டுவிட்டு கொக்கரித்து ஊரைக்கூட்டும் கோழிகள் போல் அல்லாது, அனைவருக்கும் உங்கள் சேவையை வழங்குங்கள். கவனிக்கப்படாமல் இருக்கும் உறவுகள் இன்னும் பலர். பாரபட்சம் இன்றி இலங்கையின் முதுகெலும்புகளை நிமிரச் செய்யுங்கள்.
இன்றைய இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு மலையக உறவுகளின் வலிகளின் சாபங்களும் காரணமாய் அமையலாம்.