நாட்டில் சேதன பசளைகளின் பாவனைகளூடாக விவசாயத்தை ஊக்குவிக்கும் பொருட்டு அசேதன இரசாயனங்களான யூரியா போன்ற பசளைகளின் இறக்குமதிகளுக்கு தடைவிதிக்கப்பட்டதால் யூரியா ஒரு அந்தரின் விலை 8000/- முதல் விற்கப்படுகிறது.
இந்தியாவிலிருந்து கடல் மார்க்கமாக குறித்த அசேதன இரசாயனப் பசளைகள் கொண்டு வரப்படுவதாகவும் சந்தேகிக்கப்படுகிறது.
இலங்கை அரசு வெளிநாடுகளில் இருந்து சேதன இரசாயன பசளைகளை இறக்குமதிசெய்வதில் ஆர்வம்காட்டி வருகின்ற நிலையில் சீன உற்பத்தி பசளை ஒன்று தீங்கு விளைவிக்கும் பக்ரீரியாக்களை கொண்டிருப்பதாக ஆய்வு செய்யப்பட்டு தவிர்க்கப்பட்டுள்ளதாம்.
இவ்வாறு நம்பிக்கையூட்டுமாற்போல் சம்பவங்களைப் பகிரங்கப்படுத்தி எப்படியோ மக்களை ஏமாற்றும் நடவடிக்கைகள் தான் அரங்கேறவுள்ளன என்பது சர்வநிச்சயம்.
எதுவாகினும் பல இடங்களில் நெல்விதைப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதுவரை நெற்செய்கையை ஊக்குவிக்கும் பொருட்டு கடந்த வருடம் வரை மானிய உர வழங்கல் மூலம் விவசாயிகளின் உற்பத்திச் செலவுக்கான சுமை குறைக்கப்பட்டது.
இப்போது பசளைத்தட்டுப்பாடு அறியப்படும் நிலையில் விவசாயிகளின் நிலை கவலைக்கிடம்.
இவ்வாண்டு பெரும்போகம் கை கொடுக்குமா? என் அச்சமே நிரம்புகிறது.
பல கரையோர மாவட்ட வயல்நிலங்கள் வானம் பார்த்த பூமிகளாதலால் பசளை மூலமே பயிர்க்காலத்திற்குள் விளைச்சலை உறுதிப்படுத்த முடிந்தது.
ஆனால் இப்போது சாத்தியப்படுமா?
சேதனப்பசளைகள் எதிர்பார்க்கை விளைச்சலைத்தருமா?
இயற்கை என்ன யோசித்திருக்கிறது?
பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.