கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்ட பயணத்தடை ஒக்ரோபர் 01 முதல் தளர்த்தப்பட்டுள்ளது.
மக்கள் விழாக்காலச் சிறுவர்கள் போல அங்கும் இங்குமாய் பறந்து திரிகின்றனர். வியாபார நிலையங்கள் யாவும் பண்டிகைக் கால கடைத்தெருக்கள் போல களை கட்டுகின்றன.
வீதியெங்கும் வாகன இரைச்சல்கள், 40 நாட்களுக்கு மேலாக சோபை இழந்திருந்த சூழலில் வசந்தகால வருகையைப் போல வீதிகளில் மக்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளது.
அப்படியென்றால் இவ்வளவு நாளும் நாடு முடங்கியா இருந்தது? என்று நீங்கள் கிண்டல் செய்வதும் உணர முடிகிறது.
உண்மையில் ஒரு சில சொற்கேளாப் பிள்ளைகளைத் தவிர பலர் முடங்கித்தான் இருந்தார்கள்.
தொற்றுக்களின் எண்ணிக்கைகளின் அதிகரிப்பும், மரணவீத அதிகரிப்பும் மக்கள் மனங்களில் பயவுணர்வையும், ஏனையோர் மீதான சமூக அக்கறையையும் விளைவித்ததன் பலன் பயணத்தடை பயன்மிகுவித்தது எனலாம்.
இந்தளவில் துறைசார் வல்லுநர்களின் பயணத்தடை தேவை எனும் எதிர்பார்க்கை வெற்றி கண்டுள்ளது என்று கருதினும் ஏற்புடையது.
ஆனால் நாடு திறந்து கிடக்கிறது எனுமாற்போல் மக்கள் கொரோனாவின் தாக்கம் குறைந்துவிட்டது என்று கருதினால் அது மடமைத்தனம்.
இன்னும் கொரோனா ஓயவில்லை.
கடந்த பயணத்தடைக்கு முன்பதாக கொரோனாவின் உச்சக்கட்ட தாக்குதல் போல மீளவும் கொரோனா உக்கிர தாண்டவம் ஆடாவண்ணம் தவிர்ப்பது குடியானவர்களின் கடமையாகும்.
சிறையிலிருந்து புறப்பட்ட பறவைகள் போல பறக்கின்ற வேகத்தில் கொரோனா எனும் கொடிய கிருமியை மறந்து விடாதீர்கள்.
மறந்து விட்டால் நாடு இருக்கும், நாம் இருக்க மாட்டோம்!