இலங்கையின் ஆட்சி ஒரு விளையாட்டு மைதானத்தில் நடத்தப்படுகின்றது என்கின்ற சிந்தனையே மேலிடுகிறது. ஏனெனில் ஒரு லட்சம் மெட்ரிக் தொன் அரிசி இறக்குமதிக்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது.
இவ்வாறு இறக்குமதி செய்வதற்கு காரணம் விவசாயிகள் நெல்லின் உத்தரவாத விலையை அதிகரிக்க வேண்டும் எனக்கூறி நெல்லை தர மறுக்கிறார்கள் என ஆளும் தரப்பினால் கருத்து வெளியிடப்பட்டுள்ளது.
அத்தியாவசிய தேவைகள் மற்றும் பொருட்களின் தட்டுப்பாடு தொடர்பில் விவசாய அமைச்சர் முன்னர் கருத்து தெரிவித்த போது 2020ஆம் ஆண்டு நெற் செய்கையில் ஆண்டுக்கு தேவையான நெல்லின் அளவையும் பார்க்க அதிகளவான நெல் அறுவடை செய்யப்பட்டதாக தெரிவித்தார்.
அவ்வாறு இருக்க ஏதோ ஒரு காரணத்தை கூறி அரிசியை இறக்குமதி செய்ய வேண்டும் என்கின்ற அமைச்சரவையின் அனுமதி விளையாட்டுத்தனமான விடயமாகக் கொள்வதில் ஆச்சரியமில்லை.
இலங்கையில் உற்பத்தி செய்ய முடியாத அல்லது இலங்கையில் உற்பத்தி செய்யும் போது சாத்தியமான விளைச்சலை தரமுடியாத பொருட்களுக்கு இறக்குமதி தடை விதித்த அரசாங்கம், இங்கேயே உற்பத்தி செய்யக்கூடிய அரிசிக்கு இறக்குமதி அனுமதி கொடுத்திருப்பது விமர்சனத்துக்கு உரியது.
நாட்டின் அன்னிய செலாவணி பலம் இழந்து காணப்படுவதால் சில பொருட்களை இறக்குமதி செய்யும்போது 100 வீதம் வைப்புச் செய்ய வேண்டும் என்று சிபாரிசு செய்த மத்திய வங்கி உள்நாட்டில் விளைவிக்கக்கூடிய அரிசியின் இறக்குமதிக்கான அங்கீகாரம் தொடர்பில் என்ன சொல்லப் போகின்றது?
அதாவது நாட்டில் உள்ள விளைநிலங்கள் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டும் தமிழர் பிரதேசங்களில் இருக்கக்கூடிய விளைநிலங்கள் இராணுவ ஆக்கிரமிப்புக்குள் இருக்கின்ற நிலையிலும் அரிசி உற்பத்தி திருப்திகரமாக இருக்கிறது என்று விவசாய அமைச்சர் தெரிவித்த குறுகிய காலத்தில் இறக்குமதிக்கு அந்தஸ்து வழங்கப்பட்டுள்ள விடயமானது பொருத்தமற்றது என்றே பலராலும் விமர்சிக்கப்படுகிறது.
சாதாரணமாகவே அரிசி ஆலை உரிமையாளர்கள் அரசினால் சிபாரிசு செய்யப்பட்ட விலையை தவிர்த்து புதிய விலை நிர்ணயங்கள் ஏற்படுத்தப்பட்ட இந்நிலையில் இறக்குமதி செய்யப்படும் அரிசிக்கு என்ன நேருமோ? என்ற அச்சத்தில் நாட்டு மக்கள் உள்ளனர்.
ஆக விளைவிக்கப்பட கூடிய பொருளை இறக்குமதி செய்வதை போன்ற மடமைத்தனம் எங்கும் இருக்காது என்ற எண்ணத்திலேயே மஞ்சள் மற்றும் உளுந்து போன்ற அத்தியாவசிய பொருட்களின் இறக்குமதிகளை இவ்வரசு தவிர்த்து, உள்நாட்டு உற்பத்திகளை அதிகரிக்க வேண்டுமென்று கூறியிருந்தமை இவ்விடத்தில் ஆழ்ந்து நோக்க வேண்டிய ஒன்று.
அதே நேரத்தில் அரிசியின் இறக்குமதி தொடர்பிலான அமைச்சரவை அந்தஸ்தையும் எடை போட்டுப்பாருங்கள். அப்போது புரியும் நம்மை ஆள்பவர்கள் ஒரு விளையாட்டு மைதானத்தில் இருந்து கொண்டு விளையாடுகிறார்கள் என்று.