எல்லோருக்கும் ஒவ்வொன்று எளிது: பெற்றோர்களே கவனிக்க…

1328

தமிழ் பெருமாட்டி ஒளவையார் தனிப்பாடல் ஒன்றில் கூறியதுபோல, உலகத்தில் படைக்கப்பட்ட ஜீவராசிகள் அனைத்தும் தனிப்பெரும் திறமைகளை கொண்டதாகவே படைக்கப்பட்டுள்ளன.

அண்மையில் வெளிவந்த கல்விப் பொதுத் தராதரப் பத்திர சாதாரணதர பரீட்சை புள்ளிகளை வைத்துப் பார்க்கின்றபோது, அனைத்து பாடங்களுக்கும் A சித்தி பெற்று சிலர் சித்தியடைந்துள்ளனர். சிலர் சித்தியடைய தவறி உள்ளார்கள். சிலர் அடுத்த வகுப்பிற்குச் செல்லக்கூடிய அளவில் சித்தியடைந்துள்ளனர்.

இங்குதான் ஒளவையார் சொன்ன கீழ்வரும் பாடல் தொடர்பில் சிந்திக்க வேண்டும்.

“வான்குருவி யின்கூடு வல்லரக்குத் தொல்கரையான்

தேன்சிலம்பி யாவர்க்குஞ் செய்யரிதால் – யாம்பெரிதும்

வல்லோமே யென்று வலிமைசொல வேண்டாம்காண்

எல்லார்க்கும் ஒவ்வொன் றெளிது”.

அதாவது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விடயம் எளிதானதாக இருக்கும் என்பது இப்பாடலின் பொருள்.

ஒருவரால் செய்யப்படுகின்ற செயல் மற்றொருவரால் எண்ணிக்கூடப் பார்க்க முடியாது இருக்கும். அதுபோலத்தான் பெற்றோர்கள் மற்றவர்களை உதாரணம் காட்டி தம் பிள்ளைகளை வழிநடத்துகின்ற அல்லது கண்டிக்கின்ற தன்மையை விடுத்து, மேற்சொல்லப்பட்ட பாடலின் பால் இருக்கக்கூடிய தாற்பரியத்தை உணர்ந்து கொள்ள வேண்டும்.

ஒரு பிள்ளை மிகச்சிறந்த முறையில் சித்தியடைந்து கல்வியில் சிறந்து விளங்கும் என்றால் இன்னும் ஒரு பிள்ளை ஒரு துறையில் சிறந்து விளங்கும் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.

ஒவ்வொருவருக்கும் ஈடுபாடுள்ள, பொருத்தமான, பிடித்தமான, ஏற்ற துறைகள் என்று ஏதேனும் இருக்கும். அதனை குறித்த பிள்ளையிடம் இருந்து தெரிந்துகொண்டு அப்பிள்ளையை ஊக்கப்படுத்த வேண்டிய முதற் கடைப்பாடு பெற்றோர்களையே சாரும். அதை விடுத்து மற்றவர்களை உதாரணம் காட்டி கண்டித்தல் என்பது, பிள்ளைகள் உளவியலில் பாதகத்தை ஏற்படுத்தி அவர்களின் பாதையை மாற்றத்திற்கு உள்ளாக்கும்.

நாம் நினைத்த மாதிரி பிள்ளைகளை உருவாக்குவதை விடுத்து அவர்களுக்குப் பிடித்த மாதிரி வருவதற்கு பூரண ஒத்துழைப்பு வழங்குங்கள்.

தற்போதைய நவீன தொழில்நுட்ப உலகம் எத்தனையோ சந்தர்ப்பங்களை எதிர்கால சந்ததியினருக்காக கொண்டுள்ளது. அவற்றில் எல்லோராலும் சிறந்து விளங்க முடியாது.

ஒவ்வொருவர் ஒவ்வொரு துறையில் சிறந்து விளங்கக்கூடிய ஆற்றலைக் கொண்டிருப்பார்கள். அந்த வகையில் உங்கள் பிள்ளைக்கும் ஏற்ற துறை என்று ஒன்று இருக்கும்.

அதற்காக அந்தப் பிள்ளை விடாமுயற்சியுடன் உழைப்பதற்கு உறுதுணையாக இருக்க வேண்டியது நமது கடமை என்பதை மனதில் கொள்ளுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here