சவாலுக்குள்ளான வாழ்வாதாரம்: யார் தான் வாழ முடியும்

546

“ஆன முதலில் அதிகம் செலவானால்
மானமழிந்து மதிகெட்டு போன திசை
எல்லார்க்கும் கள்ளனாய் எழுபிறப்பும் தீயனாய்
நல்லார்க்கும் பொல்லானாம் நாடு”

“நல்வழி” என்னும் நூளில் ஔவையார் எழுதிய பாடல் இது.

விளக்கம்

ஈட்டும் பொருளினைவிட அதிகமாக செலவு செய்பவர்கள் பிற்காலத்தில் தங்கள் மானத்தையும், அறிவினையும், உணர்வையும் இழப்பார்கள். அவர்கள் எவ்வழி நடந்தாலும் திருடர்கள் போல நடத்தப்படுவர்.

எத்துனை பிறப்பு பிறந்தாலும் எவ்வித மரியாதையும் கொடுக்கப்படாமல் தீயவர் போல நடத்தப்படுவர். இப்பாடலில் குறிப்பிட்டதுபோல தற்கால சூழல் “வரவு எட்டணா செலவு பத்தணா” என்னும் கூற்றுக்கு ஏற்றாற்போல் அமைந்துள்ளது. நாட்டில் ஒரு சராசரி மனிதன் வாழ்வதற்கு தேவையான மாத வருமானத்தின் அளவு அதிகரித்துள்ளது.

அரிசி, பருப்பு, மரக்கறி வகைகள், எரிவாயு , பால்மா, கட்டடப் பொருட்கள், கட்டுமான பொருட்கள், சேவைகள் ஆகியவற்றின் செலவீனம் அதிகரித் துள்ளது.

ஆனால் அந்த அளவுக்கு மாத வருமானம் போதியதாக இல்லை. “கோழி மேய்த்தாலும் கவர்மெண்ட் இல் மேய்க்க வேண்டும்” என்று பெருமிதம் கொள்கின்ற உத்தியோகம் கூட திணறுகிறது.

அரச சம்பளத்தை வைத்துக்கொண்டு இன்றைக்கு இலங்கையில் வாழ முடியாது. இதற்குக் காரணம் விலைவாசி அதிகரிப்பு, அத்தியாவசிய பொருட்களின் பதுக்கல், இறக்குமதிக்கு எதிரான தடைகள், உள்நாட்டு உற்பத்தியில் ஏற்பட்ட வீழ்ச்சி என்பனவே காரணமாகின்றன.

இலங்கை இதற்கு முன்னரும் மூடிய பொருளாதாரக் கொள்கை என்கின்ற ஸ்ரீமா அரசாங்கத்தின் காலத்தில் இதுபோன்ற இன்னல்களை அனுபவித்து இருக்கின்றது.

அதுபோலவே இப்போதைய சூழலும் இருக்கின்றதோ என்று எண்ணத்தோன்றுகின்றது. இந்நிலைமை அன்றாடங்காய்ச்சி களுக்கும், அவ்வப்போது உழைத்து உண்ணுகின்ற மக்களுக்கும், கால நிலைக்கேற்ப விவசாயம் செய்கின்ற விவசாயிகளுக்கும், கட்டுப்படுத்தப்பட்ட அரசு ஊதியம் பெறும் உத்தியோகஸ்தர்களுக்கும், தங்கி வாழ்கின்றவர்களுக்கும் பொருத்தமானது அல்ல என்பதை எல்லோரும் அறிவர்.

இந்நிலைமை இவ்வாறு நீடிக்கு மாயின் தமது வாழ்வாதாரத்திற்காக இன்னொருவரை சார்ந்திருக்கின்ற தங்கி வாழ்வோர் எனும் சமூகம் தனது உறுப்பினர்களை பலவந்தமாக அதிகரிக்கக்கூடும்.

ஒரு ஜனநாயக நாட்டில் தம்மால் தெரிவு செய்யப்பட்ட அரசியல்வாதிகள் நம்மை ஆளுகின்ற போது இப்படியொரு நிட்டுரம் இலங்கை போன்ற நாடுகளில் மட்டுமே அவதானிக்க முடியும்.

ஒன்று உள்நாட்டு உற்பத்திகளை ஊக்குவிக்கும் செயற்பாடு விரைவு படுத்த வேண்டும். உள்ளது முன்னைய காலங்களைப்போல் இறக்குமதிகளின் பால் கவனம் செலுத்த வேண்டும்.

இல்லையெனில் நிரந்தர வருமானம் உள்ளவர்கள் கூட வறுமைக் கோட்டுக்கு உட்பட்ட சமூகத்திற்குள் வலிந்து தள்ளப்படுவதை யாராலும் தவிர்க்க முடியாது. இதையே மேலே தரப்பட்ட பாடல் தெளிவாக கூறி நிற்கின்றது.

சம்மந்தப்பட்ட அமைப்புகளோ திணைக்களங்களோ அரச நிறுவனங்களோ ஏற்புடைய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here