உலகம் போற்றும் உத்தமராகிய அகிம்சையின் தந்தை அண்ணல் மகாத்மா காந்தியால் அகிம்சை தேசமாக உலக அரங்கில் புகழ் பெற்ற பாரத தேசம் ஈழத்தமிழர்களை ஏமாற்றிவருகிறது என்பதை ஆணித்தரமாக நிரூபித்த நாளின் நினைவு நாள் இன்று.
இற்றைக்கு 34 ஆண்டுகளுக்கு முன் ஈழவள நாட்டின் நல்லூர் எனும் புண்ணிய சேத்திரத்தில் தன் இனத்தின் விடுதலைக்காக இந்திய அரசிடம் கோரிக்கை வைத்து உண்ணா நோன்பு எனும் அகிம்சையின் தந்தை காந்தி வழியில் தன்னை மெழுகாய் உருக்கிச் சுடராய் ஒளிர்ந்த தியாக தீபம் அணைத்து விடப்பட்ட நாள்.
ஆம், உண்மையில் என்று அந்த தியாகத்தையும் அகிம்சையை விரும்பாத இந்திய ஆட்சியாளர்களின் பாராமுகத்தால் அணைத்து விடப்பட்டது என்பதே உண்மை.
அதன் பின்னும் ஆபத்பாண்டவர்களாக தம்மை அடையாளப்படுத்தி பல நாடகங்களை இந்தியா நடத்தி வந்து ஈழத்தமிழர்களை நிர்க்கதியாக்கியுள்ளது.
பல ஆண்டுகளை கடந்தும் இன்றுவரை ஒரு தனிமனிதனின் தியாகம் பேசப்படுகிறதென்றால் அதன் பின்னால் இருக்கக்கூடிய உண்மைத்தன்மையை யாரும் சொல்லி உணரவேண்டியதில்லை.
அந்த உண்மைக்கு உரிய அங்கீகாரம் இதுவரை கிட்டாது போனதற்கு ஒரே ஒரு காரணம் தான் இருக்கிறது. அதாவது காந்தியின் காலத்தில் அகிம்சையை உணர்ந்த மேலைத்தேய மக்களின் ஆட்சியைப் போல் இப்போது இலங்கை மற்றும் இந்தியா போன்ற ஜனநாயக நாடுகளில் ஆட்சியாளர்கள் இல்லை என்பதே.
மேலைத்தேய மக்களின் மனிதாபிமானத்தைப் போல இங்குள்ளவர்களிடம் மனிதாபிமானம் இல்லை. அத்தகைய மனிதாபிமானம் இதுவரை இல்லை.
அந்த சூழலினாலேயே பல உயிர்கள் காவு கொள்ளப்பட்டும் சொத்துக்கள் இழக்கப்பட்டும் இந்த தேசம் இரத்தக் காற்றை சுவாசிக்க நேர்ந்தது.
இன்றைக்கு தன் இனத்திற்காய் தன்னையே அகிம்சைப் போராட்டத்தில் ஆகுதியாக்கிய தியாகியை நினைவுகூற முடியாத சூழலும் இங்குதான் உண்டு. உண்மைகள் என்றும் உறங்குவதில்லை. தியாக தீபம் அவர்களின் நினைவுகள் என்றும் நிலைத்து வாழும்.