புலம்பெயர் தமிழ் உறவுகளை போல் யாரும் தம் இனத்தை தாங்கமாட்டார்கள்

603

உலகளாவிய பெருந்தொற்றுக் காரணமாக இலங்கைத் திருநாட்டிலும் பொதுமுடக்கம் காரணமாக பல வறுமைக் கோட்டிற்கு உட்பட்ட சுதேசிகள் வாழ்வாதாரச் சுமைக்கு உள்ளாகியுள்ளனர்.

இதனால் பல அன்றாடங்காய்ச்சிகள் தமது ஒரு வேளை உணவுக்காகப் பிறரைச் சார்ந்து இருக்க வேண்டிய தேவைக்குள் தள்ளப்பட்டுள்ளனர்.


அந்த வகையில் புலம் பெயர் தமிழ் உறவுகளைப் பொறுத்தவரை நிலத்திலே வாழும் தமது உறவுகளை தம்மால் இயலுமான அளவிற்கு தாங்கி உதவி வருகின்றனர் தினக்கூலிகள், இடம் கடந்து அன்றாட வேலை செய்பவர்கள் எனும் பல வகுதியினர் பொது முடக்கம் காரணமாக வேலைவாய்ப்பிழந்து தமது அன்றாடத்திற்குரிய அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்ய முடியாது தவிக்கின்ற போதில் பல கிராமங்களில் அவ்வவ் கிராமங்களைச் சேர்ந்த புலம் பெயர் உறவுகளால் உலர் உணவுப் பொதிகள், நிதியுதவி போன்றன வழங்கப்பட்டு வருவது மனிதம் இன்னும் வாழ்கிறது என்பதை உரமாய் நிரூபிக்கின்றது.


இலங்கையில் இருந்து புறப்பட்டபோது அவர்கள் பட்ட இன்னல்கள் சொல்லிமாளா. சில நாட்களில் உணவில்லை, மாற்று உடையில்லை, கூட ஆதரவில்லை இப்படி பல இல்லைகள் பசி, பட்டினி, பிரிவு இவற்றை சுமந்து கடல் கடந்து சென்று அங்கு பனியிலும், வெய்யிலிலும், புதிய சமூகத்திலும் தம்மை அர்ப்பணித்து உழைக்கும் உறவுகளுக்கு உலகம் எதிர் நோக்கியுள்ள நிலைமை நன்கு புரிந்துள்ளமை வியப்பல்ல.


அத்தகைய இன்னல்களை நாமிருக்கும் போது நம் உறவுகள் அனுபவிக்கக் கூடாது என்கின்ற உயரிய நோக்கமே புலம் பெயர் உறவுகளின் தாராள சிந்தைக்குக் காரணமாயிருக்கும் என்பது நம் சிற்றறிவுக்குப் புலப்படுகிறது.


இன்றைக்கு மட்டுமல்ல இறுதி யுத்தத்தின் போது சொந்த நாட்டில் அநாதைகளாய் பரிதவித்த மக்களைத் தாங்கியவர்களும் இவர்கள் தான்.

யுத்தத்தால் சிதைவடைந்த வடக்கின் பெரும் பொக்கிசமான கல்வியை அடித்தளமிடும் பாடசாலைகள் பலவற்றை தத்தெடுத்து அவற்றை மீள் புனரமைத்து சேவைகளைப் பெருக்கி தடையற்ற சூழலை உருவாக்கியதில் இவர்களின் பங்கு எண்ணற்றது.


நலிவுற்ற மக்களுக்கு ஜனநாயக நாடு செய்யத் தவறியவற்றை புலம் பெயர் உறவுகள் செய்து தூண்களாய் தாங்கி வருகின்றனர் என்பதில் இரு வேறு கருத்தில்லை.


இது போல் இலங்கையில் வேறு இனங்களில் இல்லை. அதனால் தான் அதிமேதகு ஜனாதிபதி நியூயோர்க்கில் கோரியிருக்கிறார் புலம் பெயர் தமிழர்கள் நாட்டின் பொருளாதாரத்திற்கு பெரும் பங்கு வகிக்க முன்வரவேண்டும் என்று.

அவருக்கு தெரியும் இறுதி யுத்தத்தில் சொத்துக்களும் சரி மக்களும் சரி கொத்துக் கொத்தாய் எப்படி சிதைக்கப்பட்டனர் என்றும் அதன் பின்னும் அந்த இடத்தில் எப்படி அந்த இனம் வேரூன்றி வருகின்றது என்பதும்.

ஆதலால் தான் தன்னை மறந்தோ அல்லது தன்னிலை மறந்தோ இக்கருத்ததை வல்லரசின் வாசலில் நின்று உலகறியச் செய்துள்ளார்.


நிஜம் நிலைக்கும், தர்மம் வாழும் என்பதற்கு இதுவும் ஒரு பெரும் உதாரணம். உறவுகளே! வாழுங்கள், வாழ வையுங்கள் இலங்கையின் பணவீக்கத்தால் பலர் நிர்க்கதியாகியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here