க.பொ.த சா/த பரீட்சை முடிவுகள் வெளியாகியுள்ளது. கடினமான சூழலிலும் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றவர்களின் முயற்சிகள் பாராட்டிற்குரியது.
சிலரால் சிறந்த அல்லது எதிர்பார்த்த பெறுபேறுகளை அடைய முடியாமல் போயிருக்கும். அதற்காக துவண்டு விடாதீர்கள். நீங்கள் முயற்சி ஒன்றை வெற்றிகரமாக முயன்றுள்ளீர்கள். கா.பொ.த சா/த என்பது ஒரு படி.
இலங்கை கல்விப்பாரம்பரியத்தில் அல்லது கல்விக் கொள்கையில் அனைவரும் கடக்க வேண்டிய மிக முக்கியமான படி. இதில் மாற்றுக்கருத்தில்லை.
இதில் வென்றுவிட்டவர் வாழ்க்கையை வென்று விட்டவர் என்றோ அல்லது இதில் கணிசமான பெறுபேறை எட்டாதவர் வாழ்க்கையை இழந்துவிட்டார் என்றோ பொருள் இல்லை.
அனைத்திலும் அதிதிறமைச்சித்தி பெற்றவர்கள் க.பொ.த உ/த பரீட்சையில் இலக்கைத் தவறவிட்டதும் உண்டு. ஏதோ கா.பொ.த உ/த இற்கு போகலாம் என்றளவில் சித்தி பெற்றவர்கள் மிகச்சிறந்த பெறுபேறுகளை உயர்தரத்தில் பெற்றதும் உண்டு.
எம்மால் எந்தளவுக்கு இறங்கி இலக்கை நோக்கிப் பயணிக்க வேண்டுமோ அந்தளவிற்கு முயல வேண்டுமே தவிர, சாதாரண தர பரீட்சை முடிவுகளை வைத்து உங்களை நீங்கள் அதீதமாக தாழ்த்தியோ உயர்த்தியோ எண்ணிவிடாதீர்கள். “வெற்றிக்கு வழி, விடாமுயற்சி” என்பார்கள்.
ஆகவே, விடாது முயலுங்கள். “முயற்சி திருவினையாக்கும்” க.பொ.த உ/த வகுப்புகளுக்கு செல்லத் தகுதியானவர்கள் ஓய்ந்து விடாதீர்கள்.
O/L என்பது பொதுப்பரீட்சை. A/L என்பது போட்டிப்பரீட்சை. இரண்டிற்கும் வித்தியாசம் உள்ளது. யாராக இருந்தாலும் A/L ற்காக கொடுக்க வேண்டிய ஊக்கம் (Effort ) நீங்கள் தனிநபராய் O/L ற்காக கொடுத்த ஊக்கத்தைக் காட்டிலும் பன்மடங்கு அதிகம். A/L இன் பின்னர் தான் பலருக்கு வாழ்க்கை தொடங்குகிறது.