காணாமல் ஆக்கப்பட்டோருக்கு மரணச் சான்றிதழ் அதிருப்தியில் உறவுகள்

377

நியூயோர்க் சென்றுள்ள ஜனாதிபதி அவர்கள் ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் அவர்களை சந்தித்தபோது காணாமல் ஆக்கப்பட்டோருக்கு மரணச் சான்றிதழ் வழங்க உள்ளதாக தெரிவித்துள்ள கருத்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

போர் நடந்து இன்றைக்கு ஒரு தசாப்தங்கள் கடந்து இருக்கின்ற நிலையில் இதுவரை வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை திருப்பித் தருமாறு பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வரும் உறவுகள் தமது அபிலாசைகளை பலதரப்பட்ட வகைகளில் காட்டியும் பயனற்றுப் போய் உள்ளது.

இவர்களால் மேற்கொள்ளப்பட்டு வரும் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் 1600 நாட்களையும் கடந்து, இரண்டு கட்சிகளின் ஆட்சிகளை கண்டு பலனின்றி இருக்கின்ற சமகாலச் சூழலில் சர்வதேச நீதிப் பொறிமுறையே பொருத்தமானது என மன்றாடுகின்ற சூழலில் இப்படியான ஒரு தகவல் நிச்சயம் அவர்களை பாதித்து இருப்பதில் வியப்பில்லை.

இதே அரசாங்கம் தான் 2009 ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தின் போது வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட செயற்பாட்டிற்கு உறவுகளால் குற்றவாளியாக முன்னிறுத்தப்பட்டது.

அதே அரசாங்கத்தின் அதே உறுப்பினர்கள் தற்போது ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளருடன் கைலாகு கொடுத்தும் கௌரவம் கொடுத்தும் வரவேற்கப்படுவதை காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் பார்க்கின்றபோது மனம் எத்துணை வேதனை அடையும் என்பதை அவர்களால் மட்டுமே உணர முடியும். இவ் உளவியலை பாதிக்கப்படாத யாராலும் உணர்ந்துகொள்ள முடியாது.

இந்நிலையில் சர்வதேச விசாரணையொன்று தேவை என்று மன்றாடும் இவர்களுக்கு ஜனாதிபதியின் கூற்று, இருந்த கொஞ்ச நஞ்ச நம்பிக்கையையும் கூறுபோட்டு உள்ளது எனலாம். இனி இதற்கு சாத்தியமில்லை என்பதைப்போல் உள்ளகப் பிரச்சினைகள் உள்ளக பொறிமுறையூடாகவே தீர்க்கப்படவேண்டும் என கூறப்பட்டுள்ளமையும் சான்றாகிறது.

ஆக எத்தனையோ போராட்டங்கள் எத்தனையோ மகஜர்கள் என்று தம் வாழ்நாட்களை கழித்துக்கொண்டிருக்கும் உறவுகளுக்கு நீதியின் குரலாய் துணை நின்று ஒலிப்பதற்கு தமிழ் அரசியல்வாதிகள் இல்லையே என்பது இன்னும் வருத்தம் தரத்தக்கது.

ஈழத் தமிழர்களின் வாழ்வு போராட்ட வாழ்வாகவே முடிந்து விடுமோ என்றே எண்ணத் தோன்றுகிறது.

ஆதலால் பொருத்தமான சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பொருத்தமானவர்கள் குரல் கொடுக்க வேண்டும். இதன் மூலமாக நீதிகோரும் உறவுகளுக்கு நீதியைப் பெற்றுத்தர வேண்டும்.

மரணச் சான்றிதழ் வழங்குதல் என்பது அவர்கள் இல்லை என்பதை அரசாங்கம் ஒப்புக் கொள்வதாகவே உறுதிப்படுத்தப்படுகிறது என்பதை மனதில் கொள்ளுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here