இன்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடர் தொடங்கிய சந்தர்ப்பத்திலேயே இலங்கை தொடர்பான பிரேரணையில் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சல் பட்ச்லெட் இலங்கை தொடர்பான அறிக்கையை முன்வைத்துள்ளார்.
இதன்போது தற்போதைய அரச தலைவரால் தரப்பட்ட ஜூன் மாத அறிக்கையை வரவேற்றுள்ளார். அதேவேளை இலங்கையில் மனித உரிமைகள் பலவீனமடைந்துள்ளதாகவும் அத்துடன் நீதிச்சேவை பலமற்றதாகவும் உள்ளதாக அறிக்கையிட்டுள்ளார்.
அரசை விமர்சிப்பவர்கள் மெலினப்படுத்தப்படுகிறார்கள் என்பதனை ஏற்றுக் கொண்டுள்ளதோடு ஊடகவியலாளர்கள் மற்றும் காணாமல் போனவர்களின் குடும்பங்கள் மீதான கண்காணிப்பு, அச்சுறுத்தல் மற்றும் நீதித்துறை துன்புறுத்தல் ஆகியவை தொடர்வதாகவும் ஒப்புவித்துள்ளார்.
2009ல் இறுதியுத்தம் முடிவுக்கு கொணரப்பட்டு 12 ஆண்டுகளில் 8தடவைகளில் இலங்கை சார் பிரேரணைகள் முன்வைக்கப்பட்டாலும் இன்றுவரை நீதி என்பது எட்டாக்கனியாகவே உள்ளது.
அரசு பொறுபுக்கூறலுக்கு கால அவகாசம் கோருவதும் அதனை ஐ.நா மனித உரிமைகள் அமைப்பு ஏற்பதும், அதேவேளை நீதி கோரும் மக்களுக்கு நம்பிக்கையளிப்பதும் அனுமன் வால் போல தொடர்கிறதே தவிர தீர்வுகள் எட்டப்படாமலேயே காலங்கள் கரைகின்றன.
பேரவையின் உறுப்பினர்கள் இலங்கை குறித்து தொடர்ந்து கவனம் செலுத்தவும், நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை முன்னேற்றுவதில் நம்பகமான முன்னேற்றத்தைத் ஆராயவும் நான் ஊக்குவிக்கிறேன் என மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சல் பட்ச்லெட் தெரிவித்திருப்பது ஓரளவு நம்பிக்கை வார்த்தைகளாக அமைந்தாலும் உறுப்புரிமை நாடுகளின் தாக்கம் எவ்வாறு அமையும் என்பது எதிர்வுகூற முடியாதது.
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள சமூக பொருளாதார நெருக்கடி இலங்கைக்கு சாதகமாக இருப்பதும் இங்கு உற்று நோக்கக்கூடியது.
“கழுவுற மீனில நழுவுற மீன் ” போல இம்முறை நழுவல் போக்கிற்கு இடம் உண்டு என்பதே நமது ஊகம்.
மீறி நன்மை நடந்தால் இறைசித்தம்.