நமது நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள சமூக பொருளாதார நெருக்கடியை தீர்ப்பதற்கு அறிவார்ந்த அரசு ஒன்று தேவைப்படுகிறதா? என்ற தேடல் தற்போது ஏற்பட்டுள்ளது.
நாட்டில் உள்ள 68 லட்சம் மக்களின் தெரிவாக அரங்கேறிய அரசு 2 வருடத்தில் மக்களின் நலன் தொடர்பில் திட்டங்களை வகுக்காமலும் கொரோனா தாக்கத்திலிருந்து நாட்டை துரிதமாக மீட்பதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்காமலும் ஏமாற்றி வருகிறகிறதாக பௌத்த பீடங்களும் சமூக ஆர்வலர்களும் கருத்துக்களை பரிமாறிவருகின்றனர்.
இதனை உறுதிப்படுத்தும் வகையில் அபயராம விகாராதிபதி முருத்தெட்டுவே ஆனந்த தேரர் கூறியுள்ளதான “ராஜபக்ஷகளின் ஆட்சி இத்துடன் முடிவுக்கு வரும் ” எனும் கூற்று அரசியல் அரங்கில் ஆழ்ந்து சிந்திக்கப்படவேண்டியது.
உண்மையில் நகைப்பிற்குரிய விளையாட்டுத்தனமான அறிவித்தல்கள் ஊடாக நடுத்தர மற்றும் வறுமைக்கோட்டிற்கு உட்பட்ட மக்களின் பால் கருசனை அற்ற அரசாக அமைந்துள்ளதாக வைக்கப்படும் இதர கட்சிகளின் விமர்சனங்களும் இணைகின்றன.
நாட்டுமக்கள் கர்ப்பமாவதை காலந்தாழ்த்தல், தொலைபேசி மற்றும் உள்ளாடை போன்ற தவிர்க்க முடியாத பொருட்களை அத்தியாவசியமற்றதாக்கல் என்றவாறாக எந்த நாட்டிலும் இல்லாத விசித்திர முயற்சிகளை அறிமுகஞ்செய்தல் இவ் அரசின் விசேட தன்மை.
கல்வி நிகழ்நிலைக்கு வந்து பாடசாலைகள் திறக்காத சூழலில் கைப்பேசிகள் மற்றும் இலத்திரனியல் சாதனங்களின் இறக்குமதிக் கட்டுப்பாடு பொருத்தமானதா?. உள்ளாடைகள் ஜெர்சி போன்ற ஆடைகள் அதிகம் மக்களால் பாவிக்கப்படும் நிலையில் அவற்றின் மேலான இறக்குமதிக் கட்டுப்பாடு எந்தளவிற்கு பொருத்தமானது?. இதன் பின்னால் இருக்கக் கூடிய அரசியல் என்ன?. எதுவுமே புரியாத புதிராகவே தொடர்கிறது.
இலங்கையின் ஆட்சியாளர்கள் பொதுவாக அவசர கால நிலைமையை அறிவிப்பது தமது ஆட்சியினை காப்பாற்றுவதற்காகவே அமைந்தது. தற்போது நடைமுறையிலுள்ள அவசரகால நிலைமையும் அவ்வாறானது எனவே விமர்சிக்கப்படுகிறது.
தகுதியானவர்களுக்கு உரிய பதவிகள் வழங்காமை என்பதும் பாரிய குறைபாடாக கருதப்படுகிறது.
இதன் மத்தியில் ஐ.தே.க வினர் குறிப்பிடுவதைப் போல் அறிவார்ந்த அரசு இல்லை என்பது உறிதியாகிறதோ எனும் எண்ணம் வலுக்கத்தான் செய்கிறது.