சர்வதேச ஊடகங்களில் தற்போது பெரிதும் பேசுபொருளாக உருவெடுத்திருப்பது இலங்கையில் உணவுப் பஞ்சம் எனும் கருத்து.
அதற்கு மிக முக்கிய காரணம் கடந்த ஆகஸ்ட் 30 ஆம் திகதி இலங்கை அரசால் வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளிவிடப்பட்ட அத்தியாவசிய உணவுப் பொருள் விநியோகத்திற்கான அவசர கால சட்ட விதிமுறைகள் ஆகும்.
பொதுவாக சோமாலியா போன்ற நாடுகளுக்கு இணையான பஞ்சம் ஏற்பட்டு விட்டதான கருத்தையே அவசரகால விதிமுறைகள் எனும் சொற்பதம் தருவதனால் இலங்கை உணவுப்பஞ்சத்தை அனுபவிக்கிறது என்பதாக கருத்துக்கள் வலம் வருகின்றன.
உண்மையில் பஞ்சமா? என்றால் அதனை அரசு மறுக்கிறது. காரணம் இலங்கையின் அரிசித் தேவை ஆண்டொன்றிற்கு 2.4 மில்லியன் மெட்ரிக் தொன்கள்.
ஆனால் 2020 ஆம் ஆண்டு 13 லட்சம் கெக்டேயர் வயற்பரப்பில் செய்யப்பட்ட நெற்செய்கையின் மூலம் 3.2 மில்லியன் மெட்ரிக் தொன்கள் அரிசி கிடைக்கப் பெற்றுள்ளதாம்.
ஆகவே அரிசி தேவைக்கதிகமாக உள்ளது என்பது சான்றாக காட்டப்படுகிறது.
அரிசியினை கிலோவிற்கு 100 ரூபாயாக விற்கக்கூடிய நிலைமை காணப்பட்டாலும் 150 முதல் 225 வரை விற்கப்படும் நிலை ஏன் என்பது புரியாத புதிர். இதற்கான காரணம் உணவுப்பதுக்கல் என்றும் அறியப்படுகிறது.
அண்மையில் அவசர கால நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டபின் 29900 மெட்ரிக் தொன்கள் சீனி கைப்பற்றப்பட்டதான செய்தி உணவுப்பதுக்கல் நிலை இருப்பதை உறுதி செய்தாலும் இந்நிலைமையினை நிவர்த்தி செய்யும் சட்டங்கள் இன்னும் வலுவாக்கப்படாமை ஏன்? என்ற கேள்வியும் எழுகிறது.
மஞ்சள் இறக்குமதிக்கு தடைவிதித்து ஒரு வருட காலம் நெருங்கும் நிலையில் இன்னமும் மஞ்சள் தட்டுப்பாடா? அல்லது பதுக்கலா? என்ற சர்ச்சையே நிலவுகிறது.
காரணம், தேவையான அளவு மஞ்சள் வாங்க முடியும் ஆனால் 5500 முதல் 7000 ரூபா வரை விலை மாறுபடுகிறது.
ஒரு புறம் சேதன விவசாயக் கொள்கை, மறுபுறம் இறக்குமதித்தடைகள், இதனோடு பொருட்களைப் பதுக்கும் அறமற்ற செயற்பாடு, அது மட்டுமன்றி விலைவாசி அதிகரிப்பு மற்றும் கொரோனா கால பொருளாதார நெருக்கடி இவற்றால் மக்கள் அல்லலுறுகின்றனர் என்பதே உண்மை.
நாட்டில் உணவுத்தட்டுப்பாடு இல்லை என்று சொன்னாலும் நுகர்வோர் பொருட்களை பெறுவதில் சிரமத்திற்குள்ளாக்கப் படுகின்றனர் என்பதை மறுக்க முடியாது.
உணவுத்தட்டுப்பாடு அல்லது பஞ்சமில்லை என்றால் சாதாரண நிலைமையை ஏற்படுத்துதல்தானே நியாயம்.