இலங்கை அரசே எம்மைக் காத்தருள்க!

435

“கொடையளி செங்கோல் குடியோம்பல் நான்கும்

உடையானாம் வேந்தர்க் கொளி”.

தேவைப்படுவோர்க்குத் தேவையானவற்றைக் கொடுப்பது, எதிர் கட்சியினரிடமும் இனிதாய்ப்போசுவது, நீதி விளங்கும் ஆட்சி செய்வது, மக்களைப் பாதுகாப்பது இவை நான்கையும் உடையதே அரசுகளுக்கு விளக்குப் போன்றது என்று விளக்கம் தருகிறார் பேராசிரியர் சாலமன் பாப்பையா.

ஜனநாயகத்திற்கு நான்கு தூண்கள் இருப்பது போல் அரசாட்சிக்கும் நான்கு விடயங்கள் இருக்க வேண்டும் என்பது இக்குறளின்பால் தெளிவாகிறது.

பத்தாயிரத்தை எட்டிப்பிடிக்கும் தூரத்தில் கொரோனா மரணங்கள் நிகழ்ந்து வருகின்றன. இதற்கும் அரசாட்சிக்கும் என்ன தொடர்பு என்று கேட்டு விடாதீர்கள். உள்ளது.

ஆட்சியாளர்கள் பொருத்தமான நேரத்தில் பொருத்தமான முடிவை எடுத்திருந்தால் இன்றைக்கு இவ்வளவு தூரம் கொரோனா நிலைமைகள் உருவாகியிருக்காது.

காலம் காலமாக நம் நாட்டில் மக்களாட்சி என்பது எட்டாக் கனியாகவே தொடர்கிறது.

ஆட்சிபீடம் ஏறும் அரசியலாளர்கள் நாட்டின் முக்கியமான இடர்களின் போது தன்னிச்சையான முடிவுகளையே எடுக்கிறார்கள். எதிர்க்கட்சி என்ற பெயரிலும் மக்களால் தெரிவான அரசியலாளர்கள் இருக்கிறார்கள் என்பதற்கு இம்மியும் இடம் தருவதில்லை.

பிரச்சனைகளுக்கு மிகச் சிறந்த முடிவு சர்வகட்சி கலந்துரையாடல்களிலும் எட்டப்படலாம் என்பது தொடர்பில் எண்ணங்களைச் செலுத்துவதில்லை. அதற்கு காரணம்,

எங்கே அவர்கள் பிரபல்யம் அடைந்து விட்டால் தாமே அவர்களுக்கான செல்வாக்கை ஏற்படுத்தி விடுவோமோ என்ற அச்சம் தான்.

தர்மம் தலைகாக்கும் என்பதில் இம்மியும் நம்பிக்கையற்றவர்கள் தான் ஜனநாயக நாடுகளில் ஆட்சிபீடம் ஏறுகின்றனர். செயல்தொறும் தம்மை மட்டுமே முன்னிலைப்படுத்தவேண்டும் என்ற நோக்கில் மேற்படி குறளின் விளக்கத்தின்பால் ஆட்சி செய்ய தவறுகிறார்கள்.

இதனால் அவஸ்தைப்படுவது என்னமோ மக்கள் தான்.

அரசியல் பலம் ஒருபுறம் இருந்தாலும் மக்களாட்சி என்பதன் அர்த்தத்தை ஆட்சியாளர்கள் உணர வேண்டாமா? ஆதலின், மேலும் கொரோனா மரணங்களால் அப்பாவி மக்களின் இழப்புக்களைக் குறைத்து கொரோனா சூழலில் இருந்து நாட்டை மீட்க அனைத்துக் கட்சிகளுடன் இணைந்து அரசு இயங்குவதனால் நாட்டு மக்களுக்கு அரசின் செயற்பாடுகளில் நம்பிக்கை வலுக்கும்.

இன்றுவரை அரசின் மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை என்பதே உண்மை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here