உலகப்பெருந்தொற்றினால் இயல்பு இழந்து போயுள்ள ஏனைய அரசுகள் போல் இலங்கை அரசும் பொருத்தமான நேரத்தில் பொருத்தமான முடிவை எடுக்க முடியாது திணறுகிறது.
கொரோனா தொற்று ஆரம்பித்த காலத்தில் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து சட்டமாக்கி அதை மீறுவோருக்கும் கைதுகள் மூலம் தண்டனைகளை வழங்கும் அளவிற்கு செயற்பட்ட அரச இயந்திரம் தற்போது தொற்றுக்கள் அதிரித்த நிலையிலும் மரணங்கள் ஐயாயிரத்தை தாண்டி உக்கிரமாக அதிகரித்துக் கொண்டிருக்கின்ற நிலையிலும் துறைசாா் வல்லுநா்கள் நாட்டை முடக்கும்படி அறிவுறுத்துகின்ற நிலையிலும் ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் போல் தற்போது எதையும் அமுலாக்க முடியாது திண்டாடுகின்றது.
சீனாவை முழுமையாக நம்பியதை தற்போதைய நாட்டின் இக்கட்டான சூழமைவுக்கு பிரதான காரணமாகும்.
அதாவது சீனாவினால் தருவிக்கப்பட்ட கொவிட் நோய்க்கு எதிரான சினோபாம் எனும் வக்சின் கொரோனா அச்சத்திலிருந்து நாட்டை முழுமையாக மீட்கும் என இலங்கை பூரணமாக நம்பியிருந்தது.
இதனால் உலக சுகாதார ஸ்தாபனத்தின் அறிவுறுத்தலையும் மீறி ஏனைய வல்லரசு நாடுகளின் பிடிப்பின்மையை சம்பாதித்ததாக சீனாவுடனான நட்பினை கொவிட் தடுப்பு பொறிமுறைக்குள்ளும் உள்ளீா்த்து தற்போது நடுக்கடலில் கைவிடப்பட்ட துரும்பு போல இலங்கை தத்தளிக்கின்றது.
இதனால் நாட்டு மக்களும் செய்வதறியாது கொரோனா எனும் கொடிய பேரழிவிலிருந்து தம்மை காக்கும் மீட்பரின்றி அரசின் மேல் இருந்த நம்பிக்கையை இழந்தவா்களாக உளத்தால் நொந்தவா்களாக உள்ளாா்கள்.
சினோபாம் தடுப்பூசி மட்டுமல்லாது ஏனைய தடுப்பூசிகள் போடப்பட்டாலும் சினோபாம் இதுவரை பல நாடுகளால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை என்பதை இங்கு உற்று நோக்க வேண்டும்.
கொரோனா ஆரம்பித்த சீனாவின் வுஹான் மாநிலம் மீளவும் கொரோனா அச்சுறுத்தலுக்குள்ளாகி முடக்கப்பட்டிருப்பதாக வலைவழிச் செய்திகள் தெரிவிக்கின்றன.
ஆக பொருத்தமில்லாத வக்சின்களின் பயன்பாடும் தற்போதைய கொரோனா தொற்றின் பேரவலத்திற்கு காரணமாக இருக்கக்கூடும் என்ற நோக்கிலேயே சீனாவால் இலங்கை ஏமாற்றப்பட்டுவிட்டதோ என்கின்ற எண்ணம் பிறக்கின்றது.