சில நேரங்களில் சில மனிதர்கள்…

545

இன்றைய தினம் உலகப் பிரசித்தி பெற்றதும் வரலாற்றுச் சிறப்பு மிக்கதுமான நல்லைக் கந்தன் ஆலய பெருந்திருவிழா நாட்டில் ஏற்பட்டுள்ள பெருந்தொற்றின் காரணமாக சுகாதார நெறிமுறைகளினை கருத்தில் கொண்டதாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இவ்வாண்டு பெருந்திருவிழாவில் மட்டுப்படுத்தப்பட்ட நபர்களுக்கே அனுமதி. அதன் அர்த்தம் இறைவன் முருகனை மணவாளக் கோலத்தில் கண்டுகளிக்கும் பேறு ஏனைய அடியார்களுக்கு இல்லை என்பது அர்த்தமல்ல.

காலச்சூழல் ஆட்டிப்படைக்கின்றது. அனுசரித்து உணர்ந்து மனதால் முருகனை நினைத்துருகி இவ் இருபத்தைந்து நாட்களும் வழமையான திருவிழாக்களின் போதான நடைமுறைகளை பின்பற்றுவதன் மூலமாக உலக நன்மைக்காக பிரார்த்திப்பதே தகும்.

நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள், பொன்னாலை வரதராஜப் பெருமாள் ஆலய மகோற்சவம் நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் நயினை அம்மன் திருவிழாவும் தவிர்க்கப்பட்டது.

இவையும் சமூக நன்மைகளுக்கே என்பதனை உணர்க. ஆரம்பத்தில் சுவிஸ் பாதிரியாரால் கொரோனா பரவியதை விமர்சித்த சமூகத்தில் இன்றைக்கு நல்லைச் சூழலில் திரண்டவர்களும் உள்ளார்கள் என்பது ஏற்புடையதாகுமா?

நம் அறம் என்பது பிறன் நோகாது வாழ்தலிலும் உண்டல்லவா? இதையன்றோ இறைவன் தன் திருவிளையாடல்களிலும் போதித்திருக்கின்றான்.

அதைவிடுத்து எமக்கொரு நியாயமும் பிறர்க்கொரு நியாயமுமாய் செயல்களில் காட்டல் பார்ப்போருக்கு தவறான உதாரணத்தை வலுப்படுத்தும்.

கிடைக்கப்பெற்ற சந்தர்ப்பத்தை தவறாக பயன்படுத்துவது ஏனைய ஆலயத்திருவிழாக்களில் பாதகத்தை ஏற்படுத்தி விடுமோ என்று அஞ்ச வேண்டாமா?

ஆறாம் அறிவை நிச்சயம் பயன்படுத்த வேண்டும் என்பதை விடுத்து வேறெதைச் சொல்ல முடியும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here