அண்மைய கொரோனா கட்டுப்பாடுகளின் பேசுபொருளாக சைவாலய திருவிழாக்களும் அதற்கெதிரான முற்றுகைகளும் பிரளயப்பாதையில் செல்வதாகவே தோன்றுகிறது.
அடிப்படை வாதங்கள் இறைப்பட்டு ஆரோக்கியமற்ற சமூகக்கட்டமைப்பு மீள உருவாக்கப்படுதல் நிகழ்ந்து வருகின்றது.
சுகாதார பரிசோதகா்களின் தற்கால கடமைகள் என்பது நாட்டின் சமகாலப் பிரச்சனைக்கு அத்தியாவசியமானது.
கொரோனா எனும் பெருந்தொற்று உலகை உலுக்கும் போது சுகாதார பகுதியினரின் அர்ப்பணிப்பு மிகுந்த சேவை என்பது தவிா்க்க முடியாதது.
அதனை உணா்ந்தவா்களாக மக்களும் தமது வழிபாடுகளை நோ்த்திக்கடன்களை நிறைவேற்ற முன்வரவேண்டும்.
நாடு முற்றாக முடக்கப்பட்டால் எந்தவொரு வழிபாட்டையும் செய்ய இயலாது என்பதனை உணரவேண்டும்.
சூழலை உணா்ந்து செயற்படுவதே உத்தமம். இதனைத்தான் வள்ளுவா்
”வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும்” என்று சொன்னாா். இது இரண்டு விடயத்திற்கும் பொருந்தும்.
கொரோனா பெருந்தொற்றின் அவலத்திற்கும் பொருந்தும். அதேவேளை சமூகப்பிரச்சனையை உருவாக்காமல் தவிா்ப்பதற்கும் பொருந்தும்.
ஏனெனில் அரச கடமையிலுள்ளவா்கள் அரச கடமையை நிறைவேற்றும் போது உணா்திறன் மிக்க சமூக விடயங்களில் சமுதாய அக்கறையுடன் செயற்படலே உசிதமானது.
அதனை கையாளும் போது மிகவும் அவதானத்துடன் தன்னிச்சையான முடிவுகளைத் தவிா்த்து நியாயமான முறையில் பகிரங்கப்படுத்தியே சில காரியங்களை செய்தல் நன்மை பயக்கும். இல்லையேல் எரிமுன்னா் வைத்தூறு போலக் கெட்டுவிடும்.
ஏனெனில் சமூக விலகலற்ற இடங்கள் பல யாழ்ப்பாணத்திலும் சரி இலங்கையிலும் சரி காணப்படுகின்றன.
பொதுச் சந்தைகள், சுற்றுலாத்தலங்கள் ஏன்? ஊசி போடும் இடங்களில் கூட சமூக விலகலற்ற தன்மை காணப்படுகின்ற போது ஆர்ப்பாட்டங்களில் அதிக மக்கள் ஈடுபடும் போது ஆலயங்களை அணுகிக் கட்டுபாடுகளை விதிக்கும் போது சற்றேனும் அவதானமாக சமூகப் பொறுப்புடன் செயற்படுவது பொருத்தமானது என்றால் யாரும் மறுக்க மாட்டாா்கள்.
இவ்வாறான சந்தா்ப்பங்களில் மக்கள் விசனமடையாத வகையில் செயற்படுதல் பொருத்தமானது.
இதற்கும் வள்ளுவரையே ஞாபகப்படுத்தலாம்.
”இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந்தற்று”
நல்ல விடயங்கள் இருக்கும் போது நன்மை பயக்காத விதத்தில் இயங்குவதை தவிா்க்கலாம் என்று பொருள் கொள்ளலாம்.
ஆக உணா்திறனான விடயங்கள் நல்ல விடயங்களைச் செய்யும் போதும் பாதக விளைவை ஏற்படுத்திவிடும்.
ஆகவே அா்ப்பணிப்புடன் சேவையாற்றும் அரச ஊழியா்கள் நிச்சயம் உணா்ந்து செயற்படுதல் சமூகத்திற்கு நன்மையை மட்டுமே இட்டுச் செல்லும் என்பதனை மனங்கொள்க.