10 வருடங்களாய் நீதி கோரும் காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள்

579

உலக காணாமலாக்கப்பட்டோர் தினம் இன்றைய தினம் பரவலாக அனுட்டிக்கப்பட்டுள்ளது. கடந்த 10 வருடங்களாக பல கோணங்களில் பல இடங்களில் காணமலாக்கப்பட்டோரை முன்னிறுத்திய போராட்டங்கள் நிகழ்ந்த வண்ணமாய் இருக்கின்ற நிலையில் இன்றைய நாளும் காணாமலாக்கப்பட்ட உறவுகளால் கோரிக்கைகளும் அபிலாசைகளும் முன்வைக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் செப்டம்பரில் ஐ.நா கூட்டத்தொடர் திட்டமிடப்பட்டுள்ளது.

அதேவேளை நமது வெளிவிவகார அமைச்சரும் மாற்றப்பட்டுள்ளார். இந்நிலையில் காணாமலாக்கப்பட்டோர் தினம் அனுஸ்டிக்கப்படும் இன்று புதிய வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர். ஜி.எல்.பீரிஸ் இன் கருத்துக்கள் தற்போதைய அரசிற்கு முண்டு கொடுப்பதாகவே அமைந்திருக்கிறது.

அதாவது இலங்கையை திரும்பத்திரும்ப விசாரணைக்குட்படுத்துவது இலங்கையை அந்நியப்படுத்துவதாகவே உணரப்படுகிறது எனும் அவரது கூற்று, ஐ.நா அமர்வுகளில் இலங்கை வேண்டுமென்றே புறங்கூறப்படுவதாக வெளியுலகிற்கு எடுத்தியம்ப முயற்சிக்கிறதாகவே சித்தரிக்கப்படுகிறது.

தற்போதைய அமைச்சருக்கு வெளிவிவகாரத்தில் நீண்ட அனுபவம் உள்ளவராதலால் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல் விடயங்களை நகர்த்தக் கூடியவர்.

ஆனால் இன்று அகிம்சைப் போராட்டம் நிகழ்த்திய உறவுகளின் கோரிக்கை நீதியை வேண்டியதாயும் ஐநாவில் இது தொடர்பில் ஆணித்தரமாக பேசப்பட வேண்டும் என்பதாகவே அமைந்திருந்தது.

2017 முதல் இதற்காக அலுவலகம் அமைத்தும் எந்த முன்னேற்றமும் இருக்கவில்லை என்பதும் கண்கூடு. ஆக, இந்த ஆட்சியிலும் காணாமலாக்கப்பட்டவர்களுக்கான நீதி கிடைக்கப் போவதில்லை என்பது தெளிவு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here