அரச உத்தியோகத்தர்களின் சம்பளத்தில் கைவைத்தால்

1926

என்னவாகும்?. ஒன்றும் செய்ய முடியாது. அரச உத்தியோகத்தர்களும் வறுமைக்கோட்டிற்குள் செல்ல வேண்டியதுதான். தற்போதைய விலைவாசிகளுக்கு ஏற்றாற்போல் சம்பளம் போதியதாக இருக்கிறதென்று யாரேனும் அரச தரப்பினர் சொல்வார்களானால் சம்பளத்தில் கொரோனா நிதிக்காக குறைப்புச் செய்தலை ஏற்கலாம்.

ஆனால் வெறும் 34-40 ஆயிரம் ரூபாய்களை மட்டுமே வேதியமாகப் பெறும் கணிசமான பணியாளர்களின் சம்பளத்தில் குறைப்புச் செய்தால் நிலைமை என்னவாகும்?

என்பதனை குறித்த இராஜாங்க அமைச்சர் உணர்ந்து கொள்ள வேண்டும். ஒரு சில உத்தியோகங்களுக்கான சம்பள அளவுத்திட்டங்களை மேற்கோள் காட்டுவதன் மூலம் ஒட்டுமொத்த உத்தியோகத்தர்களின் சம்பள அளவுத்திட்டத்தையும் எடை போடும் அமைச்சரை வைத்திருக்கும் நம் நாட்டின் எதிர்காலம் கவலைக்கிடமானது.

கணிசமான அரச உத்தியோகத்தர்கள் தனி நபர் கடன், வீட்டுக்கடன் என்று கடன்களால் நெருக்கப்பட்டும், குடும்பத்திற்கான செலவீனம், கல்வி, மருத்துவம், போக்குவரத்து, அத்தியாவசிய பொருட்கள் கொள்வனவு போன்ற சாதாரணமாக தேவைப்படுகின்ற விடயங்களுக்காக மிகுதிச்சம்பளத்தை அளந்து அளந்து செலவழிக்கிறார்கள்.

இதில் வெளிமாவட்டங்களில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களுக்கு எல்லாமே இரட்டைச் செலவு. எத்தனையோ பேருக்கு வீட்டுத்திட்டம் சிபாரிசு செய்யும் கிராம சேவகர்களில் இப்போதும் குடிசை வீடுகளில் உள்ளவர்கள் இருக்கிறார்கள்.

சமுர்த்தி கொடுப்பனவுக்காக சிபாரிசு செய்யும் உத்தியோகத்தர்கள் பலர் வாடகை வீடுகளில் வசிக்கிறார்கள். மாதாமாதம் கடன்களுக்கான ஒதுக்கீடு ஒருபுறம்.

இப்படியாயின் எப்படி அரச உத்தியோகத்தர்கள் சமாளிக்க முடியும் என்பதை அந்த இராஜாங்க அமைச்சருக்கு யாரேனும் புரியவையுங்கள்.

பலரது வாழ்த்துக்கள் உங்களை வாழவைக்கும். சொகுசு வாகன போக்குவரத்து, குளிர் அறை, சுழல் நாற்காலி, எல்லாத் திட்டத்திலும் ஊழல் என்று பண மூட்டை மேல் படுத்துறங்கும் நபர்களுக்கு தெரிவதில்லை பல அரச பணியாளர்கள் வெறுமனவே ஒரு நிரந்தர தொழிலை வைத்திருக்கிறார்களே தவிர, யாரும் அன்றாட வாழ்வியலுக்காக போதிய வருமானத்தை உடையவர்களாக இல்லை என்று.

80 லட்சம் பேருக்கு உதவ வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அப்படியாயின் துணிந்து நாட்டை முடக்கலாம் என்பதையும் யாரும் ஏற்பர்.

அதற்காக அரச பணியார்களின் சம்பளம் தான் குறைக்கப்பட வேண்டும் என்பது ஏற்புடையதன்று. குறித்த இராஜாங்க அமைச்சரின் சலுகைகளைக் குறைத்தாலே பல நூறு குடும்பங்களுக்கு ஒரு மாத சீவியம் வழங்கலாம்.

இப்படி எல்லா அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், அள்ளக்கைகள், சொள்ளக்கைகள் என்று கணக்குப் போட்டுப்பாருங்கள். சரியாய் வரும்.

இல்லை அரச பணியாளர்களது சம்பளத்தில் தான் நாட்டையும் நடத்த வேண்டுமாயின், கடன்களைத் தள்ளுபடி செய்து விட்டு, அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைத்து விட்டு, உங்களுக்கு இருப்பது போல் மருத்துவ, போக்குவரத்து சலுகைகளை தந்துவிட்டு வாருங்கள். யோசிப்போம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here