“உழுதுண்டு வாழ்வாரே வாழ்வர் மற்றெல்லாம் தொழுதுண்டு பின் செல்வர்”. இது நம் முப்பாட்டன் வள்ளுவன் சொன்ன பொன்மொழி.
ஆனால் அண்மை நாடான இந்தியாவில் விவசாயம் செய்யும் மேன்மக்கள் கடன் தொல்லையால் தம் இன்னுயிரை மாய்க்கின்ற அவலநிலை தொடர்ந்து வருகிறது. காரணம் விளைச்சல் குறைவு.
ஆனால் சாகுபடிக்கான முதலீடான விதை, பசளை, கிருமிநாசினி, களைநாசினி, விவசாய உபகரணங்கள் போன்றவற்றின் விலைகள் அதிகம்.
தற்போதைய விவசாயத்தை இன்னும் தெளிவாக சொல்ல வேண்டுமானால் “சுண்டங்காய் காப்பணம்: சுமைக் கூலி முக்காப்பணம் ” என்பதாகவே அமைகிறது.
இந்நிலை தற்போது இலங்கையிலும் உருவாக்கப்படுகிறது. இது இலங்கையின் பணம் படைத்த முதலீட்டாளர்களின் சுகபோகத்திற்காக ஏழை எளிய விவசாயிகளின் உதிரம் திட்டமிட்டு உறிஞ்சப்படுவதாகவே கொள்ளலாம்.
உண்மையில் கிளிநொச்சியில் சிறுபோக அறுவடைகளை விற்க முடியாத நிலைக்கு இதுவே காரணம்.
விவசாயம் ஒன்றை அறுவடை வரை கொண்டிழுக்க செலவாகும் பணத்தினை மீளப்பெறமுடியாது விவசாயிகள் திணறுகிறார்கள்.
அவர்களை இன்னும் மெலினப்படுத்துவதாக அமைகிறது நெற்கொள்வனவில் இழைக்கப்படும் அநீதிகள்.
களஞ்சியப்படுத்தும் வசதிக்குறைபாட்டை தமக்கு வாய்ப்பாக்கி தனியார் கொள்வனவாளர்கள் செய்யும் அநீதிகள் ஆரோக்கியமானதல்ல.
இந்நிலை நீடிக்குமானால் இந்திய விவசாயிகளுக்கான நிலையே இலங்கையிலும் ஏற்படும். ஆதலால் நெற் கொள்வனவு சபை ஊடாக அரசு உரிய சேவையை வழங்க முன்வர வேண்டும்.