ஆளுங்கட்சியை சேர்ந்த பெண் பாராளுமன்ற உறுப்பினர் அண்மையில் இலங்கையின் வெளிநாட்டுக் கடன்களை அடைக்கக் கூடிய வழிமுறை தொடர்பில் கருத்தை தெரிவித்துள்ளார்.
அவரது கருத்தின்படி கஞ்சா செடிகளை வளர்த்து அவற்றை ஏற்றுமதி செய்வதன் மூலம் கணிசமான அந்நிய செலாவணியை ஈட்ட முடியும்.
அதனால் இலங்கை பட்டுள்ள கடனை விரைவில் அடைத்து விடமுடியும் என்பது அவரது கருத்து. அவரது எண்ணம், அதாவது இலங்கை அதிகம் கடனை பெற்றுள்ளது. அதனை அடைத்து முடித்து இந்நாட்டை இறையாண்மைமிக்க நாடாக மாற்ற வேண்டும் என்பது வரவேற்கத்தக்கது.
உண்மையில் நம்மை ஆளுகின்ற ஆட்சியாளர்கள் எமக்கு எதை தருகிறார்களோ இல்லையோ ஆனால் நாட்டு மக்கள் மத்தியில் இனத்துவேசத்தையும், தனிநபருக்கான கடன் சுமையினையும் வளர்த்து விடுகிறார்கள்.
இத்தகைய ஆதங்கத்தின் உச்சமே கௌரவ உறுப்பினர் தெரிவித்த கருத்து. குறித்த கஞ்சாவிற்கு ஏற்றுமதி வர்த்தகத்தில் நிலையான தன்மை உள்ளமையை நினைவுபடுத்தி, அதை போதைப் பொருளாக பாவிக்காமல் ஏற்றுமதிப் பொருளாக உற்பத்தி செய்தல் நல்லது என்றானதே அவரது கருத்து.
இதனை சாதாரணமாக கடந்துவிடமுடியாது.
ஏதாவது செய்தேனும் கடனை அடைத்து விடவேண்டும் என்கின்ற நினைப்பின் பின்னால் இருக்க கூடிய கடன் சுமையைத்தான் நாம் நன்கு சிந்திக்க வேண்டும்.
பொதுவாக ஏழை மக்களும் அப்படித்தான் விதிவசத்தால் குடும்பச் சுமையினை சுமக்க முடியாமல் தவிக்கும் குடும்பங்களைச் சார்ந்த சிலர் போதைப் பொருள் வர்த்தகத்தினுள் பிரவேசித்தலின் பின்னால், எதையாவது செய்து இந்த குடும்பத்தினை முன்னேற்றிவிட வேண்டும் என்கிற போக்கே காணப்படும்.
ஆனால் அதன் பின்னால் இருக்கக் கூடிய சட்டவிரோதம் பாழடையும் போதை நுகர்வோர் தொடர்பில் இம்மியும் கவலைப்படாது பயணிக்கும் செயல் தர்க்கத்திற்குரியது.
நிற்க, புகையிலையை காலாகாலம் தமது வாழ்வாதாரப் பணப்பயிராய் பயிரிட்ட மக்களுக்கு இனிமேல் பயிரிடக் கூடாது என சட்டம் இயற்றிய நாட்டில் கஞ்சா பயிரிட்டு ஏற்றுமதி செய்தால் கடன் சுமை குறையும் எனும் கருத்தும் தர்க்கத்திற்குரியதேயாம்.
எது எப்படியோ! கடன் சுமை ஆளுந்தரப்பின் கழுத்தை நெரிக்கிறது என்பதும் உடனடியாக உள்நாட்டு உற்பத்திப் போக்கில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் ஏன்பதும் உறுதியாகின்றது.
அதற்கு “இருக்கிறதை விட்டு பறக்கிறதிற்கு ஆசைப்படுவது” போல் செய்யக்கூடிய செயல்களை விட்டு கஞ்சாவை பயிரிடல் என்பதை கருத்தாடல் செய்யும் ஆளுந்தரப்பின் அறிவுக் கூர்மை விமர்சனத்திற்கு உட்படாமல் என்ன செய்யும்?