கொத்தலாவல சட்டம் இலவசக் கல்வியை பாதிக்குமா?

870

இலங்கையில் கடும் போக்கு அரசியல்வாதிகளால் இது வரையில் களங்கப்படுத்தப்படாத இரண்டு விடயங்கள் உண்டு. ஒன்று இலவச சுகாதார சேவை மற்றொன்று இலவசக் கல்வி.

தற்போது உயா் கல்வி அமைச்சு, கல்வி அமைச்சு, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, தொழில்முறை தர நிலைகள் நிறுவனம் (SLMC, IESL) மற்றும் பல்கலைக்கழக செனட்சபை மற்றும் கட்டுப்பாட்டுச்சபை போன்ற அனைத்து நிறுவனங்களினதும் அதிகாரங்களை பத்துப் போ் கொண்ட ஒரு சபைக்கு வழங்குகின்ற சட்டமே தற்போது பேசுபொருளாக இருக்கின்ற கொத்தலாவல சட்டமூலம்.

இதில் ஐந்து போ் இராணுவ அதிகாரிகள், இருவா் பாதுகாப்பு அமைச்சின் செயலாளா்கள், மிகுதி மூவா் அரசியல் நியமனத்திற்குட்பட்டவா்கள்.

ஆக தற்போது நடைமுறையிலிருக்கும் 1978ஆம் ஆண்டு பல்கலைக்கழக சட்டமூலத்தை மேற்கண்ட புதிய சபை பின்பற்ற வேண்டிய அவசியம் இல்லாது போனால் அவா்களால் அரச பல்கலைக்கழகங்கள் தொடா்பிலும் தனியாா் பல்கலைக்கழகங்கள் தொடா்பிலும் தன்னிச்சையான முடிவுகளை எடுக்கக்கூடிய வல்லமை கொண்டவா்களாகின்றனா்.

இவா்கள் எந்தவொரு தனியாா் பல்கலைக்கழகங்களினதும் பட்டங்களை ஆதரிப்பதற்கு விலைகளை தீா்மானிப்பதற்கும் மேலும் அரச பல்கலைக்கழகங்களின் நடைமுறைகளில் மாற்றங்களை தன்னிச்சையாக ஏற்படுத்துவதற்கும் தகுதியுடையவா்களாகின்றனா்.

இவா்களால் மேலே சொல்லப்பட்ட ஐந்து நிறுவனங்களுக்கு எவ்வித பொறுப்புக்களும் கூறப்படவேண்டிய தேவையை விடுத்து பாதுகாப்பு அமைச்சுடன் மட்டுமே இணைந்து இயங்க முடியும். ஆக இதுவும் ஒரு இராணுவமயமாக்கலுக்கு உட்டுபடுத்துகின்ற செயல் வடிவமாகவே பலராலும் பாா்க்கப்படுகிறது.

அந்த வகையில் கல்வி இராணுவமயமாக்கப்படவுள்ளதாலும் மேற்சொல்லப்பட்ட ஐந்து நிறுவனங்களினதும் வகிபங்கு இலங்கையின் கல்விப் பாரம்பரியத்தில் மறுக்கப்படுவதாலும் எதேச்சதிகாரமுள்ள கல்வி நிா்வாக முறையொன்று இச் சட்ட மூலத்தின் பின்னா் தலையெடுக்கக்கூடிய சாத்தியங்களே அதிகம்.

இந்தவிதத்தில் ஆழ்ந்து சிந்திப்போமேயானால் பரவலாக்கப்பட்ட அதிகாரத்திலிருந்து இலங்கையின் கல்விச்சேவையானது ஒரு முனை அதிகாரத்திற்கு கொண்டுவரப்படுகின்றபோது எதிா்வரும் காலங்களில் இலவசக் கல்விக்கும் பாதிப்பு ஏற்படுத்தக் கூடும் என்கின்ற அச்சம் நியாயமானதே.

இதில் முக்கியமான விடயம் இவா்களால் தனியாா் பல்கலைக்கழகங்களை அங்கீகரிக்கக் கூடிய ஆற்றல் உண்டு என்பது ஆழ்ந்து சிந்திக்கப்பட வேண்டியது. ஏனெனில் தகுதியானவா்களுக்கு கல்வி மறுக்கப்படக்கூடிய தன்மையும் தகுதி குறைந்தவா்கள் நிதி வளத்தை பயன்படுத்தி பட்டங்களை பெறக்கூடிய தன்மையும் இலங்கையின் இலவசக் கல்வியின் அப்பழுக்கற்ற கல்விப்பாரம்பரியத்தை சேதப்படுத்தும்.

மேலும் இச்சட்ட மூலமானது அடிபணிந்து கற்கின்ற புதிய இலங்கையா்களை உருவாக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. அதாவது, இலகுவாக சொல்லப்போனால் இடியமீன் குறிப்பிட்டது போல ”பேச்சு சுதந்திரம் இருக்கும் ஆனால் பேசிய பின் உத்தரவாதம் இருக்காது”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here