மண்டைதீவு என்ன கழிவுத் தொட்டியா?

1144

மண்டைதீவில் மருத்துவமனைக் கழிவுகள் எரிதொட்டி அமைப்பதற்கான ஆயத்தங்களை வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மற்றும் வேலணை பிரதேச செயலர் ஆகியோர் முனைப்புக் காட்டுவதான செய்தி மண்டைதீவு மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த எரிதொட்டி அமைப்பதற்காக மண்டைதீவு பிரதேச வைத்தியசாலையை அண்டிய பகுதி ஒன்று தெரிவு செய்யப்பட்டுள்ளதாம். குறித்த எரிதொட்டியினை அமைப்பதற்காக வெவ்வேறு பிரதேசங்கள் தெரிவு செய்யப்பட்டு குறித்த பிரதேச மக்களால் ஏற்படுத்தப்பட்ட எதிர்ப்பலைகளால் அம்முயற்சிகள் கைவிடப்பட்டன.

தற்போது இம்முயற்சியாளர்களின் தேடுதல் நடவடிக்கையில் மண்டைதீவு சிக்கிய நிலையில் அது தொடர்பான கலந்துரையாடல் ஒன்றும் மண்டைதீவு பிரதேச வைத்தியசாலையில் இடம் பெற்ற நிலையில் மக்களால் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருந்தும் குறித்த அதிகாரிகளால் இவ்விடயம் தொடர்பில் எதுவித ஆபத்தும் இல்லை என தெரிவித்த நிலையில், அப்படியாயின் எதுவித பிரச்சனையும் ஏற்படாது எனில் ஏன்? யாழ் வைத்தியசாலையிலேயே எரியூட்டலை மேற்கொள்ள முடியாது என வினவப்பட்ட கேள்விக்கு விடைதராமலே அதிகாரிகள் அகன்று விட்டனர்.

எப்படியும் குறித்த எரியூட்டல் இடம் மண்டைதீவில் ஒதுக்கப்பட்டால் சூழல் மாசுறும் அபாயநிலை நிச்சயம் ஏற்படும்.

மண்டைதீவு கழிவுக்காடாய் மாறும். ஏனெனில் குறித்த கழிவு முகாமைத்துவம் எத்தகைய கழிவுகளை திரள செய்யும் என்பதனை எதிர்வு கூற முடியாது. எதிர்காலத்தில் அனைத்து கழிவுகளும் கொட்டப்படும் இடமாகவே மாறிவிடும்.

மண்டைதீவு மக்கள் வாழும் கிராமம். யாழ்நகரில் இருந்து அண்மையில் உள்ளது. எதிர்காலத்தில் நகர மட்டத்திற்கு அபிவிருத்தியடையச் செய்யக்கூடியது.

அப்படியிருக்க இவ் கழிவுகள் எரியூட்டும் இடத்தேர்வு பொருத்தமற்றது என்பதனை அதிகாரிகள் உணர்தல் நன்று. தவிரவும் இவர்களால் தெரிவு செய்யப்பட்ட இடம் ஆலயச் சூழலை உடையது.

பொதுக்கள் கூடும் பிரதேச வைத்தியசாலை. இதனால் நீண்ட காலத்தில் சுவாச நோய்கள், ஒவ்வாமை போன்றன ஏற்படும் அபாயமுண்டு. ஆதலால் கூட்டம் முடிந்து சென்ற அதிகாரிகள் மீண்டும் இவ்விடயம் தொடர்பில் திரும்பி வரக்கூடாது என்பதே நமது தாழ்மையான விண்ணப்பம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here