இழப்பீடு வழங்குதலில் புறக்கணிக்கப்படும் தமிழ் பேசும் கடற்றொழிலாளர்கள்…

653

முடிந்து போன டிசம்பர், 2020ல் “புரேவி” எனும் பாரிய இயற்கை இடரை வடமாகாண மீனவர்கள் சந்தித்தனர். அதன் போது பல கோடிக்கணக்கான மீன்பிடி உபகரணங்களை புரேவிப்புயலுக்கு காவு கொடுத்து வடபகுதி மீனவர்கள் பாரியளவில் வாழ்வாதாரச் சிக்கலுக்குள் தள்ளப்பட்டனர்.

இதே போல தற்போது ”எக்ஸ் பிரஸ் பேர்ள்” கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தினால் தென்பகுதி மீனவர்கள் தமது வாழ்வாதாரத்தை இழந்து பாரியளவில் பாதிப்படைந்தனர்.

இவர்களுக்கான மானியம் மற்றும் இழப்பீடு என்பன இன்றியமையாதது என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஏனெனில் மிகவும் அபாயகரமான தொழிலை அன்றாடம் தமது ஜீவனோபாயத்திற்காக செய்து நாட்டின் கடல் வள உணவு ஏற்றுமதிக்காக அர்ப்பணிப்பவர்கள் தான் நம் நாட்டின் மீன்பிடி சமூகத்தினர்.

அந்தவகையில் பாரிய அன்னியசெலாவணியை ஈட்டித் தரும் மீனவர்களுக்கான இழப்பீட்டை துரித கதியில் பெற்றுத் தருவதென்பது பாராட்டுக்குரியது.

இதில் எக்ஸ் பிரஸ் பேர்ள் கப்பலின் தீ விபத்தால் பாதிப்படைந்த மீனவர்களுக்கான இழப்பீட்டை பெற்றுத்தரும் நடவடிக்கைகள் வெற்றிபெற்றுள்ளதாக கௌரவ கடற்றொழில் அமைச்சர் அண்மையில் தெரிவித்திருந்தார்.

இவ் விடயம் போற்றுதற்குரியதேயாம்.

நமது பண்டைத்தமிழில் “ஆறிய கஞ்சி பழங்கஞ்சி” என்று ஒரு பழமொழி வழக்கத்திலுண்டு. அவ் வகையில் “புரேவி” யால் பாதிப்படைந்த மக்களுக்கு இன்றுவரை எவ்வித நிவாரணமும் வழங்கப்படாமை குறித்து கவலை கொள்கின்ற போதில் அது பழைய விடயம் என மறந்து விட்டார்களோ? என்ற சந்கேதம் தலைதூக்குகிறது.

வட பகுதி மீனவர்கள் “ஏழை பேச்சு அம்பலம் ஏறாது” என்பதனை போல் எவ்வளவோ கோரியும் கோரிக்கைகள் “செல்லாக்காசாய்” போனதுவோ? என எண்ணத் தோன்றுகிறது.

ஆதலால் இது தொடா்பில் சம்பந்தப்பட்டவா்கள் எமது மீனவா்களுக்கான இழப்பீட்டை நீதியின் பால் துரிதகதியில் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கக்கூடிய சூழலில் உள்ளாா்கள் என்பது தீப்பற்றிய கப்பலால் பாதிக்கப்பட்டவா்களுக்கு இழப்பீடு வழங்குவதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மூலம் தெள்ளத்தெளிவாகின்றது.

ஆதலினால் எவ்வித பேதமும் இன்றி ”புரேவி” யால் சொத்திழப்பை எதிா்கொண்டு வாழ்வாதாரத்தில் பின் தங்கிப் போயுள்ள வட பகுதி மீனவா்களுக்கும் உரிய இழப்பீட்டைத் தந்துவ வேண்டும் என்பதே இம் மடலின் மூலமான சிரந்தாழ்த்திய வேண்டுகோளாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here