அண்மைக்காலமாக யாழ்ப்பாணத்தில் வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.
அரச புலனாய்வுத்துறை பலமாக உள்ளதாகவும் பாதுகாப்பு துறை மீளக்கட்டமைக்கப்பட்டு நேர்த்தியாக உள்ளதாகவும் அண்மையில் பொதுக்களுக்கு உரையாற்றிய விசேட உரையில் அதிமேதகு ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.
அவர் தெரிவித்த பின்னரும் கூட வன்முறை சம்பவங்கள், குற்றச் செயல்கள் இலங்கையில் பதிவாகியுள்ளன.
அதிலும் யாழ்ப்பாணத்தில் வன்முறைச் செயற்பாடுகள் தலைவிரித்தாடுகின்றன.
இதனால் மக்களின் இயல்புநிலை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பலர் உளரீதியாக விசனப்பட்டு வாழ்க்கை நடாத்துகின்றனர்.
இந்நிட்டூரம் வேறெங்கும் நிகழுமாயின் பொலிஸாரும் பாதுகாப்புப் படையினரும் நினைத்து முடிக்கும் நேரத்தில் கட்டுக்குள் கொண்டுவந்திருப்பர்.
ஆனால் யாழ்ப்பாணத்தில் கடந்த சில ஆண்டுகளாகவே வாள்வெட்டுக் கலாச்சாரம் தலைவிரித்தாடுகிறது.
இருந்தும் கட்டுப்படுத்தப்படாததற்கு என்ன காரணமோ? தெரியவில்லை.
பெரும்பாலும் யாழ்ப்பாணம் தமிழர் தாயகமாக இருப்பதால் இயல்புக்கு புறம்பான விடயங்களை கண்டு கொள்ளாமல் விடுவதால் யாருக்கும் சாதகமாக உள்ளதோ? என்னவோ? என்று தான் எண்ணத்தோன்றுகிறது.
வாள்வெட்டு கும்பலை கட்டுப்படுத்த ஆயுதம் தாங்கிய முப்படையினரால் இயலாது என்பது ஏற்புடையதன்று.
அதிலும் ஜனாதிபதி அவர்கள் உரையில் குறிப்பிட்டது போல் இலங்கையில் தற்போதிருக்கக் கூடிய கட்டமைக்கப்பட்ட புலனாய்வுத்துறையால் வன்முறையாளர்களை இனங்காணுவதென்பதும் கடினமானதல்ல.
இதற்குள் மக்களும் சாட்சியமளிக்கவோ அன்றில் முறைப்பாடளிக்கவோ தயாராகவே உள்ளனர்.
இப்படியான சூழலில் ஏதேனும் வலிமையான ஒத்துழைப்பு இல்லாமல் இவ் வன்முறை கலாச்சாரம் நீடிப்பதென்பது ஏற்றுக் கொள்ள முடியாதது.
இந்நிலைமை இப்படியே நீடிக்குமாயின் யாழ் பாழாகும். மாற்றுக்கருத்தில்லை.