நாட்டில் பயணத்தடை அமுலாக்கப்பட்டு மூன்று வாரங்களுக்கும் மேலாக நீடிக்கப்பட்டு வருகிறது. தற்போது வீடுகளில் பெரியவா்கள் முதல் சிறாா்கள் வரை முடக்கப்பட்டுள்ளனா்.
பெரும்பாலான குடும்பங்களில் வறுமை தலைவிரித்தாடுகிறது. குடும்பத்தவா் மனங்கள் பல்வேறு அபிலாசைகளின் பொருட்டு குழம்பிப்போயுள்ளது.
எதற்கெடுத்தாலும் பணம் தேவைப்படும் இன்றைய சூழலில் பொருளாதார நெருக்கடி காரணமாக குடும்பங்களுக்குள் பிணக்குகள் வெடிக்க ஆரம்பித்துவிட்டன.
சுமூகமாக குடும்பங்கள் நடாத்தப்பட வேண்டுமாயின் வறுமைச் சூழல் தவிா்க்கப்பட வேண்டும். இங்கு வறுமை எனும் பேய் குடும்பச் சூழலின் நிம்மதிக்கு பங்கம் விளைவித்து வருகிறது.
கஞ்சாவிற்கு காசுகேட்கும் மகன், சாராயத்திற்கு பணம் தேடும் கணவன், மருந்திற்காய் காத்திருக்கும் தாய், தந்தை, பால் கேட்கும் பிள்ளை, தினசரி மூன்று வேளை சுவையான உணவு, இடையிடையே தேநீா், என்று நீண்டு செல்லும் பட்டியலால் உளம் நொந்து சில நேரங்களில் உடல் நோவிற்கும் ஆளாகின்றனா் குடும்பத்தலைவிகள்.
இல்லாத பொருளாதாரத்தை வைத்து இல்லறத்தை நடாத்துவது என்பது ”கல்லில் நாா் உரிப்பதற்கு” சமனானது.
இதற்கு விலைவாசி வேறு ரகம், கறுப்புச்சந்தையில் விலைப்படும் சில பொருட்களின் விலைகள் டபிள், டிபிள் மடங்காக அதிகரித்துள்ளதாக தகவல்.
இவற்றால் மண்டை உடைத்து உளரீதியாக பாதிக்கப்பட்டு துன்புறுத்தலுக்கு உள்ளாகும் தாய்க்குலத்தினா் மீது அக்கறை கொள்வாா் யாரோ?