Type to search

Editorial

பாராளுமன்ற பலத்தை சிதைக்காதீர்கள்…

Share

அன்புக்குரிய வாக்காளர்களே!

பாராளுமன்ற தேர்தலில் தகுதியான வேட்பாளரை ஆதரிப்பது என்பது வரப்போகின்ற ஐந்து ஆண்டுகளில் நம்மை ஆளப்போகின்ற 215 பேரை தீர்மானிப்பதற்கு சமானமானது

ஏனெனில் பாராளுமன்றத்தில் தான் நாட்டின் பொருளாதார சமூக முன்னேற்றங்கள் தங்கியிருக்கின்றன.

நாட்டில் ஏற்படுத்தப்படக்கூடிய சட்டம் இயற்றப்படுவது பாராளுமன்றில் தான்.

இலங்கை போன்ற பல்லின மக்கள் வாழும் நாட்டில் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் என்பது இனம் சார்ந்து பலம் வாய்ந்ததாக அமைதல் என்பது தவிர்க்க முடியாத ஒன்று.

ஜனநாயக வரைவுகளுக்கு பலம்வாய்ந்த பாராளுமன்ற அணி என்பது மேலும் பலம் சேர்க்கும்.

இலங்கையின் தற்போதைய அரசியல் களத்தை சரியாக உற்று அவதானித்தால் அதன் போக்கு எதிர்வரும் பாராளுமன்ற ஆட்சி தமிழ் மக்களுக்கு சாதகமாக அமைவதாக தெரியவில்லை.

ஏனெனில் தற்போதைய ஆளும் அணி தமிழர்களுக்கு பாராளுமன்றில் பலமான அங்கீகாரம் கிடைத்தால் நாடு பிளவுபட்டுவிடும் என்றும் அதனால் தமது அணிக்கு அறுதிப் பெரும்பான்மைப் பலத்தை தருமாறும் சிங்கள மக்களை மூளைச்சலவை செய்து வருகின்றமை கண்கூடு.

அத்தோடு தமிழர் பிரதேசங்களிலிருந்து பாராளுமன்றிற்கு பலம் வாய்ந்த அணி ஒன்று தெரிவாவதைத் தடுக்கக்கூடிய அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறது.

இந்த இடத்தில் காழ்ப்புணர்ச்சி அரசியலைக் கண்டு ஏமாறாமல் பலம் வாய்ந்த அணி ஒன்றை பாராளுமன்றிற்கு அனுப்ப வேண்டிய கடைப்பாடு நமக்கு ஏற்பட்டுள்ளது.

பெறுமதியான வாக்காளர்களே! ஜனநாயக கடமை ஒன்றை நிறைவேற்ற நீங்கள் காத்திருக்கிறீர்கள்.

ஜனநாயகம் என்றாலே பலம் வாய்ந்த உறுப்புரிமையின் மூலம் மட்டும் தான் அடையக்கூடியது.

நமது ஜனநாயகக் கடமை பலம் வாய்ந்த அணி ஒன்றை தெரிவு செய்ய தவறுமாயின் நமது பேச்சு பாராளுமன்றில் அம்பலம் ஏறாது.

தமிழ் மக்களுக்கான அரசியல் இருப்பு வெறும் போட்டி அரசியலூடு திருப்தியுறாது.

அது போல சிங்கள கட்சிகளின் பிரதிநிதித்துவம் வெறுமனவே அதிகாரமற்ற பதவிகளுக்கு வழிவகுக்குமே தவிர வேறொன்றும் ஆகப்போவதில்லை.

உரிமை, தன்னாட்சி, அபிலாசை என்கின்ற பருப்புகள் எல்லாம் இனி வேகாது.

ஆக நமக்கு ஆட்சியாளர்களால் இனிவருங் காலங்களில் இழைக்கக்கூடிய அதர்மச் செயல்களை சற்றேனும் இழிவளவாக்க வேண்டுமெனில் பலமான பாராளுமன்ற பிரதிநிதித்துவம் மிக மிக அவசியமானது என்பதை வலிமையாக இவ்விடத்தில் பதிவு செய்கின்றோம்.

மேலும் தமிழ் ஊடகங்கள் தென்பகுதி தேர்தல் களத்தை முறையாக மக்களிடம் சேர்க்க வேண்டிய தார்மீகக் கடமையில் உள்ளதனை உணர்ந்து செயற்பட வேண்டும் என்பதும் எமது பேரவா…

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *