Type to search

Local News

தமிழர் தாயகத்தில் இளைஞர்கள் வாழமுடியாத சூழல்! 10 நாட்களுக்குள் 23 முன்னாள் போராளிகள் கைது! சிறீதரன் அதிர்ச்சித் தகவல்

Share

தமிழர் தாயகத்தில் தமிழ் இளைஞர்கள் வாழமுடியாத சூழல் உருவாக்கப்படுகின்றது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளருமான சி.சிறீதரன் கவலை வெளியிட்டார்.

கிளிநொச்சி முழங்காவில் பகுதியில் நேற்று (12.07.2020) இடம்பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கவலை வெளியிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
சிறிது காலமாவது சுதந்திரமான சுவாசக் காற்றை மக்கள் சுவாசிக்கக் கூடிய சூழலை நாங்கள் உருவாக்கி இருக்கின்றோம்.


பல முன்னாள் போராளிகள் கூட எங்களைப் பார்த்து தங்கள் நிம்மதிப் பெருமூச்சுக்களை விட்டிருந்தார்கள். ஆனால் நான் இன்று மதியம் முழங்காவில் பகுதிக்கு வந்த பொழுது ஒரு ஆலயத்தின் பூசகராக இருக்கின்ற முன்னாள் போராளி அவரது குடும்பத்தார் கதறக் கதற தூக்கிச் செல்லப்பட்டிருக்கிறார்கள்.


இது இந்த மண்ணிலே இன்று நடந்த சம்பவம் இதே போல கடந்த பத்து நாட்களுக்குள் எமது மாவட்டத்தில் மட்டும் முன்னாள் போராளிகள் 23 பேருக்கும் மேற்;பட்டவர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். சத்தம் ஏதும் இன்றி கைதுகள் நடைபெறுகின்றன.
தமிழர் தாயகத்தில் காணாமல் ஆக்கப்படும் சம்பவங்கள் தொடர்வதால் மிகவும் அச்சம் தரக் கூடிய சூழல் உருவாகி வருகிறது.

வெளியிலே உலகத்தை ஆட்டிப் படைக்கின்ற கொரோனா என்கின்ற ஒரு நோய்பற்றி சொல்லப்பட்டாலும் கூட இலங்கையில் குறிப்பாக வடக்கிலும் கிழக்கிலும் தமிழ் இளைஞர்கள் வாழமுடியாத ஒரு சூழல் உருவாக்கப்படுகிறது.

இவ்வாறு நடைபெற்றுக் கொண்டுள்ள கைதுகள் தொடர்பாக இனியும் நடக்கப் போவவை தொடர்பாக யார் பேசுவார்கள் நாங்களா ?
அல்லது சுயேச்சையாக களம் இறக்கப்பட்டுள்ளவர்களா? அல்லது ஒரு ஆசனத்திற்கு வாக்களியுங்கள் எனக் கேட்பவர்களா ? செய்யப் போகிறார்கள்!

இதே போன்ற ஒரு சூழலில் இருந்த நாங்கள் இதில் இருந்து விடுபட கடந்த 2015 ஆம் ஆண்டு ஒரு அரசியல் மாற்றத்திற்காக கடுமையாகப் போராடினோம்.
அதனால் ஒரு எதிரி மாற்றம் செய்து மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதியாக்கி ரணில் விக்கிரமசிங்க ஆகியோருடன் பேச்சு வார்த்தைகளை செய்து அரசியல் தீர்வு நோக்கிப் பயணித்தோம். ஆனால் இப்பொழுது பழைய நிலை தோன்றிவிட்டது .

ஒருவாரத்திற்கு முன் கிளிநொச்சி தொண்டமாநகர் பகுதியில் நடைபெற்ற எங்களுடைய பிரசாரக் கூட்டம் ஒன்றை தலைமை தாங்கி செயற்பட்ட முன்னாள் போராளி கைது செய்யப்பட்டுள்ளார்

விமல் வீரவன்ச சொல்கிறார் யாராவது ஒரு முன்னாள் போராளி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரசாரக் கூட்டத்தில் தோன்றினால் கைது செய்யப்படுவார்கள் அல்லது காணாமல் ஆக்கப்படுவார்கள் என்று.

இதே அரசின் கடந்த காலத்தில் எங்களுக்கு முன்னாள் போராளிகளைச் சந்திக்க முடியாத நிலைமை ஏற்பட்டது. அவர்களுக்குத் தேவையான உதவித் திட்டங்களை புலம்பெயர் தமிழர்கள் மூலம் இரகசியமாகவே செய்தோம். பின்னர் தான் வடக்கு மாகாண சபை மூலம் ஏதோ முடிந்தளவு தொகையை வழங்கி வாழ்வாதார செயற்பாடுகளை முன்னெடுக்கக் கூடியதாக இருந்தது.


அண்மையில் கூட சில போராளிகளுக்கு தலா ஒரு இலட்சம் வீதம் கனடா நாட்டில் வாழும் தமிழர்கள் மூலம் வழங்கியிருந்தோம். ஆனால் இப்போது அவர்களுடன் கூட்டமாக பேசுவது அவர்களது இன்ப துன்பங்களை அறிவது என்பது முடியாத காரியமாகவே உள்ளது. காரணம் கடந்த பத்து நாட்களுக்குள் நடக்கின்ற விடயங்களை நீங்கள் சிந்தித்து பாருங்கள்.

எவ்வாறான ஒரு சூழலில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் என்பதனைப் பாருங்கள். சுயேச்சையாகவும் வெவ்வேறு சின்னங்களிலும் அரச ஆதரவாளர்கள் அடிவருடிகள் என அனைவரும் வேட்பாளர்களாக களம் இறக்கப்பட்டுள்ளார்கள்.
பரராஜசிங்கத்தை சுட்டவர்கள் முதல் அற்புதனை சுட்டவர்கள் வரை அனைவரும் வேட்பாளர்கள். ஆகவே உங்கள் வாக்கு தமிழர்களுக்காக குரல்கொடுக்கும் சக்தியாக உள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினராகிய எங்களுக்கா இல்லை அரசுக்கு வெள்ளை அடிக்கும் அரச கைக்கூலிகளுக்கா என யோசித்து வாக்களியுங்கள் நீங்களே நீதிபதிகள் என அவர் மேலும் தெரிவித்தார்.


இப் பிரசாரக் கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்களான மாவை சேனாதிராசா,எம.;ஏ.சுமந்திரன், இ.ஆனோல்ட்,குருசாமி சுரேந்திரன் ஆகியோரும் வடக்கு மாகாண சபை அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் ,கரைச்சி,பச்சிலைப்பள்ளி,பூநகரி பிரதேசசபையின் தவிசாளர்கள் ,கட்சியின் செயற்பாட்டாளர்கள்,மக்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *