Type to search

International News

சீனாவில் கொரோனாவின் இரண்டாவது அலையா?

Share

சீனாவில் புதிதாக 66 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதியான நிலையில் மக்களிடையே பெரும் பதற்றம் ஏற்பட்டது.


இந்நிலையில் இது கொரோனாவின் இரண்டாவது அலையா? என்ற அச்சம் மக்கள் மத்தியில் மேலோங்கியுள்ளது.

கொரோனா வைரஸ் சீனாவின் வுஹான் நகரில் கடந்த டிசெம்பரில் உருவாகி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.

தொடர் ஊரடங்கு கட்டுப்பாடுகளால் அங்கு கொரோனாத் தொற்று கடந்த ஏப்ரல் மாதம் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.


ஒரு வழியாக மக்கள் நிம்மதிப்பெருமூச்சு விட்டனர்.
ஆனால், நிம்மது நீடிக்காது போலிருக்கிறது. மறுபடியும் அங்கொன்றும் இங்கொன்றுமாய் கடந்த சில நாட்களாக கொரோனாத் தொற்று மீண்டும் கைவரிசை காட்டத்தொடங்கியது. இப்போது அது வேகம் எடுப்பது போல தோன்றுகிறது.

புதிதாக 66 பேருக்கு தொற்று உறுதியாகியிருப்பது அந்த நாட்டைக் கலக்கத்துக்குள்ளாக்கி இருக்கிறது என்பது நிதர்சனம்.

முதலில் தலைநகரான பீஜிங்கில் 3 நாட்களில் 9 பேருக்கு கொரோனாத் தொற்று ஏற்பட்டது.
அதைத் தொடர்ந்து சீனாவில் மேலும் 57 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன்காரணமாக 3 நாட்களில் 66 பேருக்கு புதிதாக தொற்று பதிவாகி யிருக்கிறது.

இது கொரோனாவின் இரண்டாவது அலை அங்கு தொடங்கி விட்டதோ என்ற கேள்வியை எழுப்பி யிருக்கிறது.


புதிதாக பாதித்த 57 பேரில் 38 பேருக்கு உள்நாட்டிலிருந்து தொற்று பரவியுள்ளது. இவர்களில் 36 பேர் பீஜிங்கையும் 2 பேர் லியோனிங் மாகாணத்தையும் சேர்ந்தவர்கள் ஆவார்கள்.

9 பேருக்கு எந்த அறிகுறியும் இல்லாமல் கொரோனா பாதித்தது. இதன்மூலம் அங்கு அறிகுறிகள் இன்றி கொரோனா பாதிப்புக்குள்ளாகியுள்ள 103 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்.

இப்படி அறிகுறிகள் இன்றி கொரோனா பாதிப்புக்குள் ளாவோரைக் கண்டு சீனா அதிர்ந்து போகிறது.


ஏனென்றால் இவர்கள் ஓசைப்படாமல் மற்றவர்களுக்கு கொரோனா வைரஸை பரப்பி விடுவார்கள். காய்ச்சல் இருக்காது இருமல் இருக்காது தொண்டை வலி இருக்காது. இந்த அறிகுறிகள் இல்லாமல் இவர்கள் நடமாடுகிறபோது அவர்களை பொதுவெளியில் காண்கிறவர்கள் தனி மனித இடைவெளியை கடைப்பிடித்து விலகிச்செல்லவும் வாய்ப்பற்று போகிறது.

தலைநகர் பீஜிங்கில் கடந்த சில நாட்களில் மொத்தம் 46 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.


நேற்று முன்தின(13.06.2020) நிலவரப்படி சீனாவின் பிரதான பகுதியில் கொரோனா பாதிப்புக்குள் ளானவர்கள் எண்ணிக்கை 83 ஆயிரத்து 132 ஆகி யிருக்கிறது.
இவர்களில் 129 பேர் இப்போது பல்வேறு வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறுகிறார்கள். ஒருவர் நிலை கவலைக்கிடமாகவுள்ளது.

மொத்தம் 78 ஆயிரத்து 369 பேர் சிகிச்சைக்குப் பின்னர் குணமடைந்து வீடு திரும்பினர். 4,634 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

இப்போது பீஜிங்கில் கொரோனா பரவல் வேகம் எடுக்கத்தொடங்கியிருப்பதால் அதிர்ந்து போன உள்ளூராட்சி நிர்வாகம், கட்டுப்பாடுகளை முடுக்கி விட்டுள்ளது.

நகரிலுள்ள மொத்த உணவு, காய்கறிகள், மாமிச சந்தைகள் அதிரடியாக மூடப்பட்டன. இப்படி அங்குள்ள ஜின்பாடி சந்தை மற்றும் 6 பிற சந்தைகள் மூடப்பட்டன.


ஜின்பாடி சந்தையில் சால்மன் மீன் வெட்டும் பலகையில் கொரோனாத் தொற்று கண்டுபிடிக்கப்பட்டதுதான் அதிகாரிகளை அதிர்ச்சியில் உறைய வைத்தது. அதைத் தொடர்ந்து சியோஷிபா சந்தை, கேரிபோர் மற்றும் உமார் சந்தையில் மீன் இருப்புக்கள் அகற்றப்பட்டன.

ஜின்பாடி சந்தையிலிருந்து 40 சுற்றுப்புற மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. அவற்றிலும் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டது.


சந்தைகள்தான் கொரோனா தொற்று மையங்கள் என அதிகாரிகள் கருதுகின்றனர். இதனால் சந்தையுடன் தொடர்புடைய 10 ஆயிரம் பேருக்குக் கொரோனா பரிசோதனை முழு வீச்சில் நடத்தப்பட்டு வருகிறது

கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.

மொத்தத்தில் பீஜிங் நகரம் போர்க்கால நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இதில் என்ன சுவாரசியம் என்றால் 2 மாத காலமாக பீஜிங்கில் எந்த தொற்றும் ஏற்படாமல் இருந்ததால் அங்கு தொற்று முடிவுக்கு வந்ததாகவே அதிகாரிகள் கருதினர்.


அந்த நகரம் பாதுகாப்பானது எனக் கணிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து ஜின்பிங் அரசு தலைநகரில் 10 நாள் நாடாளுமன்றக் கூட்டத்தொடரை தொடங்கி நடத்தியது.

பொதுமக்கள் முகக் கவசங்கள் அணிவதை விட்டு விடலாம் எனக் கூறப்பட்டது. ஆனால் இப்போது நிலைமை வானிலை போல மாறிவிட்டது. அங்குள்ள குடியிருப்புக்கள் 24 மணி நேரமும் அதிகாரிகளின் கண்காணிப்பு வளையத்தின்கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன. அதிகாரிகள் அவற்றைச் சுற்றி சுற்றி வருகின்றனர்.

ஜின்பாடி சந்தையிலிருந்து கொரோனாத் தொற்று கண்டறியப்பட்டதையடுத்து பீஜிங் அவசர கால பயன்முறையில் வைக்கப்பட்டதாக மாநகராட்சி செய்தித் தொடர்பாளர் சூ ஹெஜியன் தெரிவித்தார்.

டாக்காவிலிருந்து குவாங்சோவுக்கான விமான சேவைகள் 4 வார காலத்துக்கு நிறுத்தப்பட்டன. 17 பேருக்கு குவாங்சோவில் கொரோனா பரவியதை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இப்படி பீஜிங்கில் மட்டுமல்லாது பிரதான பகுதிகளிலும் கொரோனா பரவத்தொடங்கியிருப்பது மக்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இது ஜின்பிங் அரசுக்கு புதிய தலைவலியை ஏற்படுத்தியிருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *