Type to search

Sport

பத்தாண்டுகளுக்குப் பின்னர் பயங்கரவாத தாக்குதல் குறித்து நினைவுகூர்ந்த சங்கா

Share


இலங்கை கிரிக்கெட் அணியினர் பயணித்த பேருந்து மீது பாகிஸ்தானின் லாகூர் நகரில் கடந்த 2009 இல் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக மைக்கல் அத்தர்ட்டனுடனான தொலைக்காட்சி கலந்துரையாடலின் போது இலங்கையின் முன்னாள் அணித் தலைவர் குமார் சங்கக்கார நினைவு கூர்ந்தார்.


2009 ஆம் ஆண்டு மார்ச் 3 ஆம் திகதி காலையில் இலங்கை கிரிக்கெட் வீரர்களை ஏற்றிச்சென்ற பேருந்து மீது பாகிஸ்தானின் லாகூர் கடாபி விளையாட்டரங்குக்கு அருகாமையில் வைத்து 12 துப்பாக்கிதாரிகள் தாக்குதல் நடத்தினர்.


பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டத்துக்கு கிரிக்கெட் வீரர்கள் பயணித்துக்கொண்டிருந்தபோதே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது.


அந்தத் தாக்குதலில் இலங்கை அணியைச் சேர்ந்த 6 விரர்கள் காயமடைந்ததுடன் 6 பொலிஸ்காரர்களும் 2 பொதுமக்களும் கொல்லப்பட்டனர்.

2009 இல் இடம்பெற்ற இந்தத் தாக்குதலுக்கு முன்னரும் வெளிநாட்டு அணிகள் பாகிஸ்தானுக்கு விஜயம் செய்வதில் நீண்டகாலமாக பிரச்சினை இருந்துவந்தது.

நியூஸிலாந்து அணியினர் தங்கியிருந்த ஹோட்டலுக்கு அருகாமையில் 2002 மே மாதம் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலை அடுத்து அவ்வணியினர் தமது டெஸ்ட் தொடரைக் கைவிட்டு நாடு திரும்பினர்.

அவுஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய நாடுகள் உயிர்களுக்கு பாதுகாப்பில்லை என்ற காரணத்தை முன்வைத்து பாகிஸ்தான் செல்ல மறுத்துவந்தன.

உண்மையில் சொல்வதென்றால் அப்போதைய இலங்கை அணியின் விஜயமும் ஒரு விருப்பத் தேர்வாக இருக்கவில்லை.


மும்பையில் 2008 இல் இடம்பெற்ற தொடர் குண்டுத் தாக்குதல்களையடுத்து பாகிஸ்தானுக்கான தனது கிரிக்கெட் விஜயத்தை இந்தியா இரத்துச் செய்தது. அதற்குப் பதிலீடாகவே இலங்கை அணி அங்கு சென்றது.

இந்தத் தாக்குதல் இடம்பெற்று பல வருடங்கள் கடந்த நிலையில், அத்தர்ட்டனுடனான தொடலைக்காட்சி (ஸ்கை ஸ்போர்ட்ஸ் கிரிக்கெட்) கலந்துரையாடலில் அந்தப் பயங்கரத்தை நினைவுகூர்ந்த குமார் சங்கக்கார, இலங்கை வீரர்கள் எதிர்கொண்ட அனர்த்ததையும் விபரித்தார்.

இந்தக் கலந்துரையாடலின்போது, சங்கா தனது இளம் பராயத்தில் இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம், அதன் பின்னர் சுனாமியிலிருந்து கிரிக்கெட் வீரர்களும் இலங்கை மக்களும் தப்பிப்பிழைத்தமை, லாகூர் தாக்குதல் ஆகிய விடயங்களை விளக்கினார்.

சுனாமியின்போது நாங்கள் கண்டவை, அதன் பின்னர் சமுதாயத்தில் மற்றும் யுத்தப் பிரதேசங்களில் நாங்கள் பார்த்தவை எல்லாம் லாகூர் தாக்குதலை மற்றொரு சம்பவமாக எடுத்துக்கொள்ள எங்களை அனுமதித்தது என்று கருதுகின்றேன்’ என்றார் சங்கா.

லாகூர் தாக்குதலின் போதான நினைவுகளை விபரிக்குமாறு 42 வயதான சங்கக்காரவிடம் அத்தர்ட்டன் கேட்டுக்கொண்டார்.

அந்தக் காலப்பகுதியில் ஏனைய அணிகள் பாகிஸ்தானுக்கு செல்வதில் ஆர்வம்கொள்ளவில்லை, ஆனால் தமது அணி அங்கு செல்ல தீர்மானித்ததாக சங்கக்கார தெரிவித்தார்.

அந்த கிரிக்கெட் விஜயமானது அப்போதைய இடைக்காலக் குழுத் தலைவர் அர்ஜுன ரணதுங்கவால் ஏற்பாடு செய்யப்பட்டது.


சில காரணங்களுக்காக சகல நாடுகளும் பாகிஸ்தான் செல்லாத ஒரு கால கட்டத்தில், பாதுகாப்பும் ஒரு பிரச்சினையாக இருந்த கால கட்டத்தில், எமது பாதுகாப்பு தொடர்பான எமது கவலை குறித்து அவருக்கு (அர்ஜுன) எழுத்துமூலம் அறிவித்தோம்.

ஒருவேளை ஏதேனும் நடந்தால் வீரர்களுக்கு காப்புறுதி வழங்குவது குறித்து ஆராயுமாறும் கோரிக்கை விடுத்திருந்தோம்.
இவை கண்ணியமாக மறுக்கப்பட்டதுடன் அவர் (அர்ஜுன) பாதுகாப்பை உறுதிப்படுத்த சகல விதமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது என்றார். எனவே நாங்கள் பாகிஸ்தான் சென்றோம் என்றார் சங்கா.

தாக்குதல் நடைபெற்ற அன்றைய தினம் பேருந்தில் பயணித்துக்கொண்டிருந்தபோது கிரிக்கெட் விஜயத்தை இரத்துச்செய்வதற்கு குண்டுத் தாக்குதல் ஒன்று இடம்பெற்றால் என்ன செய்வது என வீரர் ஒருவர் நகைச்சுவையாக கூறினார் என சங்கக்கார நினைவுகூர்ந்தார்.

பேருந்தில் எல்லோரும் வழமையான விடயங்களைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தனர். எமது வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவர், ஆடுகளம் ப்ளட்டாக இருப்பது உங்களுக்குத் தெரியும்.
எனக்கு மன அழுத்தத்தால் அயர்ச்சி அல்லது வேறு ஏதேனும் நிகழலாம். குண்டு ஒன்று வெடிக்கவேண்டும் எனக் கருதுகின்றேன். அப்போது நாமெல்லாம் வீடுகளுக்கு திரும்பலாம். அப்படி அவர் சொல்லி 20 விநாடிகளில் அந்தச் சம்பவம் இடம்பெற்றது.

துப்பாக்கி வேட்டுச் சத்தங்களைக் கேட்டபோது அது பட்டாசுகள் என நாங்கள் எண்ணினோம். எங்களில் ஒருவர் எழுந்து நின்றவாறு, பேருந்தை விட்டு இறங்குகள், அவர்கள் பேருந்தை நோக்கி சுடுகின்றனர் என்றார்.


துப்பாக்கிச் சூடு ஆரம்பித்ததும் துப்பாக்கிச் சூட்டிலிருந்து தப்புவதற்காக அனைத்து வீரர்களும் பேருந்துக்குள் ஓரிடத்தில் குவிந்ததாகவும் அவர் கூறினார்.

டில்ஷான் முன்னால் இருந்தார். நான் மத்தியில் இருந்தேன். மஹேல ஆகப் பின்னால் இருந்தார். எனக்குச் சரியாக பின்னால் முரளி இருந்தார். தரங்க முன்னால் அமர்ந்திருந்தார் என நினைக்கின்றேன். அப்போது பீதி மேலிட்டது.


நாங்கள் அனைவரும் பேருந்தின் பாதையில் ஒருவரோடு ஒருவர் ஒன்றாக இருந்தோம். பேருந்தை நோக்கி அவர்கள் (பயங்கரவாதிகள்) பல தடவைகள் சுட்டனர்.
கைக்குண்டுகளையும் அவர்கள் எறிந்தனர். ஏவுகணை ஒன்றையும் செலுத்தினர்’ என அந்தப் பயங்கர அனுபவத்தை சங்கக்கார விபரித்தார்.

துப்பாக்கிதாரிகளின் குறியிலிருந்து பேருந்து சாரதி தப்பியதாலேயே இலங்கை அணியினரும் பிழைத்ததாக குமார் சங்கக்கார தெரிவித்தார்.

திலான் காயமடைந்தார். எனது தோல்பகுதியில் காயம் ஏற்பட்டது. மஹேல , அஜந்த மெண்டிஸ், திலான் சமரவீர, தரங்க பரணவித்தான ஆகியோரும் காயமடைந்தனர். எங்களுக்கு காவலாக இருந்த பாதுகாப்புத் தரப்பினர் கொல்லப்பட்டமை துரதிர்ஷ்டமாகும். பேருந்து சாரதியும் இலக்கு வைக்கப்பட்டார். ஆனால் குறி தவறியது. நாங்கள் உயிர்தப்புவதற்கு அதுவே காரணமாக இருக்கலாம்’ என்றார் சங்கா.

பேருந்து சாரதிதான் எமது ஹீரோ. அவரது துணிச்சல்தான் எம்மைக் காப்பாற்றியது. நாங்கள் பேருந்தில்; மைதானத்துக்கு செல்லும்போது அங்குள்ள குறுகிய வாயில் ஊடாக நுழைவதற்கு பேருந்தை நான்கு தடவைகளாவது சாரதி முன்னும் பின்னுமாக நவர்த்துவார்.
ஆனால் சம்பவம் இடம்பெற்ற அந்த தினத்தன்று அவர் எவ்வித சங்கடத்தையும் எதிர்கொள்ளாமல் அதே நுழைவாயில் ஊடாக மிக இலாவகமாக பேருந்தைச் செலுத்தினார்’ என சங்கக்கார மேலும் தெரிவித்தார்.

இராணுவத் தரப்பினரைப் போன்று மக்கள் தமது வாழ்க்கையில் தினந்தோறும் அனுபவிக்கும் துன்பங்கள் உட்பட இன்னோரன்ன பிரச்சினைகளை சகலரும் நினைத்துப் பார்ப்பதற்கு இந்தச் சம்பவம் ஓர் அனுபவமாக இருந்தது என சங்கா குறிப்பிட்டார்.

ஆனால், எந்தச் சந்தர்ப்பத்திலும் நாங்கள் எங்களுக்காக வருத்தப்படவில்லை என்பது எனக்குத் தெரியும்.
நாங்கள் குழப்பமடைந்து ஓ என் கடவுளே, எங்களுக்கு ஏன் இந்தக் கதி என சத்தமிடவில்லை. ஏனைய மக்கள் முழுநாளும் அனுபவிக்கும் பீதி உணர்வுக்கு மத்தியில் (அந்தக் கால கட்டத்தில்) மூன்று நிமிடங்கள் முதல் நான்கு நிமிடங்கள்வரை எதிர்கொண்ட எங்களைப் பற்றி நிறைய பேசப்பட்டதென நான் நினைக்கின்றேன்.

தேசத்துக்காக உயிர்நீத்த பலரை நாம் பார்த்துள்ளோம்.
இராணுவத் தரப்பில் நாட்டுக்காக போரிட்டவர்களைப் பார்த்துள்ளோம். பல்வேறு தற்கொலைத் தாக்குதல்களால் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதைப் பார்த்துள்ளோம். யுத்த வலயத்திலும் பொதுமக்கள் சிக்கித் தவித்தனர்.

ஆனால், அந்த அனுபவமானது எம்மால் முடிந்தளவு சிறப்பான வாழ்க்கைக்கு திரும்புவதற்கான படிப்பினையைக் கொடுத்துள்ளது என சங்கக்கார அந்தப் பயங்கர அனுவத்தை சொல்லி முடித்தார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *