Type to search

Editorial

றிஸ்வானுக்கு இதயம் கனத்த இறுதி மரியாதைகள்

Share

உயிரினும் மேலானது எதுவாகவிருக்கும்? நாங்கள் உயர்வான விடயத்தை சொல்லும் போது உயிரினும் மேலான என்றே ஒப்பிடுவதுண்டு.

அத்தகைய உயிரை துச்சமெனக்கருதி தன் கண்முன்னே போகவிருந்த உயிரைக் காக்கத் தலைப்பட்ட நிஜவீரன், செயல் வீரன் சகோதரர் றிஸ்வானுக்கு எமது இதயம் கனத்த பிரியாவிடைகள்.

33 வயதேயான இரு பிள்ளைகளின் தந்தையாக இருந்து இன்னும் பல கடமைகளை இலட்சியங்களை தனக்குள்ளே தாங்கி வந்த இளம் குடும்பத் தலைவா! நீ தான் இந்த உலகில் மனித குலத்தின் மத்தியில் நிஜவீரன் என்றால் மிகையாகாது.

உனது செயலால் மரித்து போனதாக பேசப்பட்டுவரும் மனித நேயத்தை உன் உயிர் தந்து உயிர்ப்பித்துத் தந்துள்ளாய்.

நீயும் மீண்டிருந்தால் மகிழ்ந்திருக்கும் மனித குலம்.

துரதிஸ்ட வசமாக நீ வீர சுவர்க்கம் அடைந்து விட்டாய்.

அது மட்டுமா, தற்கொலைதான் தீர்வு என்று எண்ணி தன் உயிர்மாய்க்கத் துணிந்த பெண்ணுக்கு அவசரப்பட்டு விடாதே, வாழ்க்கையில் இன்னும் சந்தர்ப்பங்கள் தொடரும், தளர்ந்து விடாதே என்று மறுவாழ்வளித்துள்ளாய் சகோதரா.

குறித்த பெண்ணுக்கு மட்டுமல்ல, இதை அறிந்த மனித குலத்திற்கே உணர்த்தியுள்ளாய்.

உயிரையே கொடையாய் தந்த உத்தமனே!

உன் புகழ் வாழும். உன் சந்ததி செழிக்கும்.

இது சர்வநிச்சயம்.

உன் போன்ற இரக்கவான்கள் தம் கரம் தந்து உன் பிஞ்சுகளை கரை சேர்ப்பர்.

எப்படி அப் பெண்ணைக்காக்க இயற்கை உன்னை அனுப்பியதோ அதேபோல் உன் குடும்பத்தையும் இயற்கை காக்கத் தலைப்படும்.

போய் வா சகோதரா, மறுபிறப்பு உண்டு எனில் திரும்பிவந்து பார்,

நிச்சயம் மனித நேயம் விருட்சமாகியிருக்கும்.

அப்போது உன் ஜீவாத்மா பெருமை கொள்ளும் அதற்கு உரம் போட்டவர்களுள் நீயும் ஒருவன் என்று.

ஓம் சாந்தி.

ஆசிரியர், சிலம்பு இணைய இதழ்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *