Type to search

Editorial

டெங்கு நோய் தொடர்பில் அவதானமாக இருங்கள்

Share

உலகை உலுக்கும் கொரோனா ஒரு புறம் தலைவிரித்தாடிவரும் நிலையில் இலங்கையின் பெரும்பாலான பிரதேசங்களில் மழை பெய்து வருகின்றமையால் நுளம்புகளின் பெருக்கம் ஏற்பட ஆரம்பித்துள்ளது.

இலங்கையில் ‘அனோபிலீஸ்’ நுளம்பினால் காவப்படும் ‘மலேரியா’ பல வருடங்களாக கட்டுப்பாட்டில் இருந்தால் ‘ஈடிஸ்’ வகை நுளம்பினால் பரப்பப்படும் ‘டெங்குக் காய்ச்சல்’ இன்றும் பாதிப்புக்களை ஏற்படுத்தி வயது வேறுபாடின்றி உயிர்களையும் பலியெடுத்து வருகிறது.

இலங்கையை பொறுத்தவரை கொரோனா நோயின் தாக்கத்தால் 09 பேர் மரணமாகியிருப்பதுடன் 890 வரையிலானவர்கள் நோய்க்கு இலக்காகியுள்ளனர்.

ஆனால் டெங்கினால் ஏற்படும் பாதிப்பு இதை விடவும் பன்மடங்கு அதிகமாக இருக்கும்.

அதற்கு உதாரணமாக 2019ல் டெங்குக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை (1,05,049) 2018ல் டெங்கினால் பாதிக்கப்பட்டவர்களைப் போல் (51,659) இருமடங்கு என இலங்கைப் புள்ளிவிபரம் தெரிவிக்கிறது.

2020 ஆம் ஆண்டின் ஆரம்பத்திலிருந்து தற்போது வரை 18 ஆயிரத்திற்கும் அதிகமானோர் டெங்கு நோய்க்கு இலக்காகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் இவ் டெங்கு நோயானது நுளம்பினால் பெருகுவதால் மழை காலங்களில் மிகவும் அவதானமாக இருத்தல் அவசியமாகும்.

இந்நோயினால் பாடசாலை மாணவர்கள், குழந்தைகள், பெரியவர்கள், முதியவர்கள் என்று அனைவரும் பாதிப்படைவதுண்டு.

ஏற்கனவே நமது பிள்ளைகள் இரு மாதங்கள் பாடசாலை செல்ல முடியாமல் போயுள்ளது. இனிமேல் டெங்கு அபாயம் மேலிடுமானால் அவர்களது கல்வி செயற்பாடுகள் ஸ்தம்பிதம் அடையும்.

தவிர, 2 மாதங்களாக அனைவரும் வீடுகளில் முடக்கப்பட்டதன் காரணமாக சூழலில் நீர் தங்கக்கூடிய கழிவுப்பொருட்கள் தேங்கியிருக்க வாய்ப்புண்டு.

ஆதலால் நமது சுற்றாடலை சுத்தமாக வைத்திருப்பதன் மூலம் நுளம்பு பெருகுவதை தவிர்க்கலாம்.

மேலும் நுளம்பு பெருகுவதற்கு உடந்தையாக இருத்தல் தண்டனை வழங்கப்படத்தக்க குற்றம் என்பது யாவரும் அறிந்ததே.

ஆதலால் நுளம்பு பெருகுவதை தடுப்பது மட்டுமல்லாமல் நுளம்பு கடியிலிருந்து நம்மை பாதுகாக்க நுளம்பு வலைகள் நுளம்பு விரட்டிகளை பாவித்தல் சிறந்தது.

மக்கள் ஒன்று கூடல் தவிர்க்கப்பட வேண்டிய இச்சூழலில் டெங்கு நோயின் தாக்கம் வைத்தியசாலைக்கு செல்லும் நோயாளிகளின் எண்ணிக்கையை அதிகரித்துவிடும்.

எனவே நம்மைப் பாதுகாக்கும் முகமாகவும் சுகாதார துறையினரை மேலும் துன்பப்படுத்தாமல் இருக்கவும் டெங்கு தொடர்பில் விழிப்புடன் இருப்பது இன்றியமையாததாகும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *